தமிழ்நாட்டிலேயே பழங்குடியின பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் பங்க்...

பழங்குடியின பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் பங்க்

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின பெண்களால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறுவதாக இங்கு பணியாற்றும் பெண்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், தோடர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் மற்றும் பணியர் ஆகிய ஆறு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். வனத்தைப் பற்றி ஆழ்ந்த புரிதல் இருந்தாலும், உயர்கல்விக்கான வாய்ப்புகள் மற்றும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பழங்குடியின மக்கள் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். குறிப்பாக, கூடலூர் , குன்னூர் தாலுக்காக்களில் வசிக்கும் பனியர், இருளர், குறும்பர், காட்டுநாயக்கர் இன பழங்குடியினர் இப்போது விவசாய தினக் கூலிகளாகவே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

    மத்திய பழங்குடியின நல அமைச்சகம் மற்றும் மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உதகை அருகே பாலாடா எனும் கிராமத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல் பங்க், பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் அருகிலேயே செயல்படத் தொடங்கியுள்ளது.

    தமிழ்நாட்டிலேயே பழங்குடியின பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் பங்க் இதுவாகும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 பழங்குடியினர் பிரிவினரை உள்ளடக்கி இந்த பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பழங்குடியினத்தில் இருந்தும் இரண்டு பெண்கள் என 12 பெண்கள் ஷிப்ட் முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.8500 முதல் 10000 வரை சம்பளத்துடன் 3 சதவீத அகவிலைப்படியும் வழங்கப்படுகிறது. மேலும், இங்கு பணியாற்றும் அனைவருமே பெண்கள் என்பதால், அனைவருமே தங்களின் பொறுப்பை உணர்ந்து கடமையாற்றுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜுலை 01, 2021)

    பாலாடா சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளதால், விளைப் பொருட்களை எடுத்து செல்லும் லாரி, ஜீப் ஆகிய வாகனங்களுக்கு இந்த பெட்ரோல் நிலையம் உதவிகரமாக இருக்கிறது. பாலாடா கிராமத்தில் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும் இந்த பெட்ரோல் விற்பனை நிலையம் பயனுள்ளதாக திகழ்கிறது.

     
    Published by:Vaijayanthi S
    First published: