நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் இ-பதிவு முறைக்கு பதிலாக இ-பாஸ் நடைமுறை: அமைச்சர் ராமசந்திரன் தகவல்

வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்

நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் இ-பதிவு முறைக்கு பதிலாக இ-பாஸ் முறையை மீண்டும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதால், மீண்டும் இ-பாஸ் நடைமுறை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மலை மாவட்டமான நீலகிரியில் மட்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 10 நாட்களாக தினந்தோறும் 550-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யபட்டு வருகிறது.

இந்த நிலையில் உதகையில் இன்று தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் வனத்துறை அமைச்சர் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கா.ராமசந்திரன், தடுப்பூசி தட்டுபாட்டிற்கு மத்திய அரசே காரணம், இதனை சரிசெய்ய தமிழக அரசே 3 கோடி தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர் விடுத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், நீலகிரி மாவட்டம் அதிக காய்கறிகளை உற்பத்தி செய்யும் மாவட்டம் என்பதால் ஊரடங்கின் போது விவசாயிகள் சென்று வர தடை விதிக்க முடியாது. தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வரும் 16 பொருட்களுடன் கூடிய கொரோனா நிவாரண தொகுப்பில் தேயிலை தூளும் வழங்கபடுவதாகவும் அதற்காக 4 ஆயிரம் டன் தேயிலை தூள் நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கபட்டு அனுப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு அமல்படுத்தி உள்ள இ-பதிவு முறையை தவறாக பயன்படுத்தி வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தினர் நீலகிரி வருவதால் இங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதனால், நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் இ-பதிவு முறைக்கு பதிலாக இ-பாஸ் முறையை மீண்டும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக அனுமதி கேட்டு தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் அனுமதி கிடைத்த உடன் நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறை அமல்படுத்தபடும் என்று தெரிவித்தார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: