ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீலகிரியில் திமுக வேட்பாளரை தோற்கடித்து பேரூராட்சி தலைவரான சுயேட்சை வேட்பாளர்

நீலகிரியில் திமுக வேட்பாளரை தோற்கடித்து பேரூராட்சி தலைவரான சுயேட்சை வேட்பாளர்

சத்தியவாணி

சத்தியவாணி

ஒரு பக்கம் திமுக வேட்பாளர், மறுபக்கம் திமுக-வில் இணைந்த சுயேட்சை வேட்பாளர் என கீழ்குந்தா பேரூராட்சி வளாகம் பரபரப்பானது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் தேர்வில், திமுக-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை தோற்கடித்து பேரூராட்சி தலைவராகியிருக்கிறார் சுயேட்சை வேட்பாளர் சத்தியவாணி.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 19-ம் தேதி நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 22-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிப் பெற்றது. தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் கடந்த 2-ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் இன்று மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடந்தது. இதில் நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சியில் திமுக அறிவித்த வேட்பாளர் நாகம்மாவை வீழ்த்தி, சுயேட்சை வேட்பாளர் சத்தியவாணி பேரூராட்சி தலைவராக பதவியேற்றுள்ளார்.

சுற்றுலாவுக்கு பெயர்போன நீலகிரி மாவட்டத்தில் 11 பேரூராட்சிகள் உள்ளன. இதில் கீழ்குந்தா பேரூராட்சி 15 வார்டுகளைக் கொண்டது. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து 2, 7 மற்றும் 15 ஆகிய மூன்று வார்டுகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 2-வது வார்டை கூட்டணி கட்சியான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கியது திமுக. இதையடுத்து 7 மற்றும் 15 ஆகிய வார்டில் வெற்றிப்பெறும் ஒருவர் தான் கீழ்குந்தா பேரூராட்சி தலைவராகும் நிலை உருவானது.

இந்நிலையில் 7-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயது பட்டதாரி பெண் ரோஷினி, 13 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக-விடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். 15-ம் வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட நாகம்மா, சுயேட்சை வேட்பாளர் காஞ்சனாவை விட 1 வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

நாகம்மாவின் கணவர் கே.சின்னான் ஏற்கனவே கீழ்குந்தா பேரூராட்சி தலைவராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர். இவர் தனது வார்டை தவிர மற்ற வார்டுகளுக்கு எதுவும் செய்யவில்லை என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. இதற்கிடையே 15-ம் வார்டில் வெற்றி பெற்ற சின்னானின் மனைவி நாகம்மா, பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என திமுக தரப்பில் நேற்று அறிவிப்பு வெளியானது.

இதையும் படிங்க-  விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி - சாலைமறியல்... போலீஸ் குவிப்பு

ஏறக்குறைய நாகம்மா தான் கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத திருப்பம் நிலவியது. இன்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்த சமயம், 2-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக வெற்றிப் பெற்ற சத்தியவாணியும் போட்டியிட்டார். இவர் கடந்த 22-ம் தேதி தேர்தல் முடிவு வெளியானதும், மாவட்ட செயலாளர் முபாரக்கை சந்தித்து, திமுக-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read - சென்னை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வானார் பிரியா..

ஒரு பக்கம் திமுக வேட்பாளர், மறுபக்கம் திமுக-வில் இணைந்த சுயேட்சை வேட்பாளர் என கீழ்குந்தா பேரூராட்சி வளாகம் பரபரப்பானது. இதையடுத்து நடத்தப்பட்ட மறைமுக தேர்தலில் 9 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளர் சத்தியவாணி கீழ்குந்தா பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றார். 6 வாக்குகள் பெற்று தலைவராகும் வாய்ப்பை இழந்தார் நாகம்மா.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: DMK, Local Body Election 2022