கள்ளக்காதலுக்கு இடையூறு.. பச்சிளம் குழந்தைக்கு மது கொடுத்து கொன்று கொடூர பெண் - ஊட்டியில் பயங்கரம்
கள்ளக்காதலுக்கு இடையூறு.. பச்சிளம் குழந்தைக்கு மது கொடுத்து கொன்று கொடூர பெண் - ஊட்டியில் பயங்கரம்
பச்சிளம் குழந்தையை கொன்ற பெண்
Nilgiris | போலீசார் கீதாவிடம் மேற்கொண்ட விசாரணையில் அவருக்கு வேறு சிலருடன் முறையற்ற தொடர்பு இருந்து வந்ததும், இதற்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கொலை செய்து விட்டு நாடகமாடியதையும் ஒப்புக்கொண்டார்.
நீலகிரியில் ஓரு வயது குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் , குழந்தையின் அம்மாவே உணவை வாயில் திணித்து மூச்சுதிணற வைத்து கொலை செய்து இருப்பது பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்வர் கீதா. 38 வயதான இவருக்கு இரு முறை திருமணம் நடந்து விவகாரத்து பெற்றுள்ளார். மூன்றாவதாக கோவையை சேர்ந்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு நித்தீஷ் (3) மற்றும் நித்தின் (1) என்ற இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திக் - கீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதியினர் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கார்த்திக் 3 வயது மகன் நித்திசுடன் கோவைக்கு குடி பெயர்ந்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கீதா ஒரு வயது நித்தினுடன் வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த நிலையில் கடந்த 14 ம் தேதி குழந்தை திடீரென்று மயங்கி விழுந்துவிட்டது எனக்கூறி உதகை அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தார். குழந்தையை மருத்துவர்கள் சோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டதால், ஊட்டி நகர போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
குழந்தையின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு அளவிற்கு அதிகமாக உணவை வாயில் திணித்து மூச்சு திணறவைத்தும், உணவில் மதுபானம் கலந்து கொடுத்தும் உயிரிழப்பை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது. மேலும் தொட்டிலை ஆட்டும் போது குழந்தையின் தலையினை சுவற்றில் மோத வைத்திருப்பதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கீதாவிடம் மேற்கொண்ட விசாரணையில் அவருக்கு வேறு சிலருடன் முறையற்ற தொடர்பு இருந்து வந்ததும், இதற்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கொலை செய்து விட்டு நாடகமாடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த உதகை காவல் துறையினர் கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். முறையற்ற உறவிற்காக பெற்ற பச்சிளம் குழந்தையை தாயே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.