மசினகுடியை அடுத்துள்ள மாயார் பகுதியில் புலி தாக்கி மாடு உயிரிழந்துள்ளது. மாட்டை வேட்டையாடியது T23 புலியா அல்லது வேறு புலியா என்பதனை ஆய்வு செய்யும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரியும் T23 ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “
மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரியும் புலியை தொடர்ந்து வனத்துறை தேடி வருகின்றனர்.
நேற்று புலி நடமாட்டம் தென்பட்ட பகுதிகளில் 5 மாடுகள் கட்டப்பட்டு அதன் அருகாமையில் பரண்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. இருப்பினும் புலி தென்படவில்லை. இங்கு 25 கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது. இதில் இரண்டு புலிகள் தென்பட்டது. ஆனால் அது T23 புலி அல்ல. முதுமலையில் இருந்து கூடலூர் செல்லும் வழியில் புலி நடமாட்டம் உள்ள பகுதியில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அங்கும் T23 புலி நடமாட்டம் பதிவாகவில்லை.
Also read: தலைதூக்கும் மின்வெட்டு ஆபத்து.. தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. சமாளிக்குமா அரசு?
இன்று காலை அனைத்து பணியாளர்களும் 8 பேர் கொண்ட 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு JD சாலை, ஸ்கேட்ஷ் சாலை இடது மற்றும் வலது புறம், உப்புபள்ளம் பகுதிகளில் இந்த குழுக்கள் பிரித்து அனுப்பபட்டது. அதிலும் T23-யின் எந்த கால் தடமும் கிடைக்கவில்லை. எனவே இந்தப் பணி நாளையும் தொடரும்.
மேலும் அந்த பகுதிகளில் கூடுதலாக 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று 25 கேமராக்கள் வைக்கப்பட்டது. தற்பொழுது அதன் அருகே 40 கேமராக்கள் என மொத்தம் 65 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் நாளை காலை ஆய்வு செய்து புலி நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்கப்படும். இந்த பணி தினமும் காலை தொடர்ந்து நடைபெற்றும் இதில் புலி குறித்து தடயங்கள் கிடைக்கப்பெற்றால் அந்த பகுதியில் தேடுதல் பணி தொடந்து நடைபெறும்.
எந்த ஒரு வனவிலங்காக இருந்தாலும் மனிதர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் போது அது அதனுடைய இடத்தை மாற்றிக்கொள்ளும். ஆனால் தற்சமயம் இந்த புலி எந்த ஒரு கேமராவிலும் பதிவாகாமல் தற்போது அதே இடத்தில் பதுங்கி இருப்பதாலும் அங்கு புதர்கள் அதிகமாக இருப்பதால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியவில்லை.
T23 புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபடுவதால் அவர்களுக்கு ஒரு நாள் ஓய்வு என சுழற்சி முறையில் பணிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மாயார் வனப்பகுதியில் ஒரு மாடு புலியால் அடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. அது T23 புலியா அல்லது வேறு புலியா என்று நாளை தெரிய வரும், தற்சமயம் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டடு வருகிறது என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: News On Instagram