நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்: விளாசும் பாஜகவின் நிர்மல் குமார்!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - சிடிஆர் நிர்மல் குமார்

ஒன்றிய அரசு என்பதனை வெறும் சொல்லாடலாக மட்டுமே எடுத்துக்கொள்ள இயலவில்லை. திமுக, பிரிவிணைவாத கோஷத்தை மீண்டும் கையிலெடுப்பதன் முன்னோட்டமாகவே இது பார்க்கப்படுகிறது என நிர்மல் குமார் தெரிவித்தார்.

  • Share this:
‘ஒன்றிய அரசு’: சமீபத்தில் திமுகவினரால் பயன்படுத்தப்படும் இந்த சொல்லாடல் தான் தமிழகத்தில் புதிய அரசியல் மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் அனைத்து அறிக்கைகளிலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்ற பதத்திலே தான் குறிப்பிட்டுட்டு வருகிறார். இதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட திமுகவினரும் ஒன்றிய அரசு கோஷத்தை பலமாக கையிலெடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் ,  ஒன்றிய அரசு என்ற இந்த சொல்லாடல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் இதில் உள்நோக்கம் இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்த பின்னர் வேண்டுமென்றே பிரிவிணைவாதத்தை திமுக கையிலெடுத்திருக்கிறது என்பதுமே தமிழக பாஜகவினரின் குற்றச்சாட்டாக உள்ளது.

பல விவாதங்களுக்கு வித்திட்டுள்ள ‘ஒன்றிய அரசு’ விவகாரம், திமுக மற்றும் பாஜக தலைவர்களிடையே மோதல் போக்கையும் உருவாக்கியிருக்கிறது, இந்த விவகாரம் மத்திய - மாநில அரசுகளின் உறவில் தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் "தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் போன்ற அமைச்சர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருவது குறித்தும், இதில் வேறு ஏதேனும் சதி இருக்கிறதா என தேசிய பாதுகாப்பு முகமை (NIA) விசாரிக்க வேண்டும்" என தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஒரு பரபரப்பு கருத்தை ட்விட்டரில் முன்வைத்துள்ளார்.

 நிர்மல் குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “PTR பழனிவேல் தியாகராஜன் போன்றோர்களின் பிரிவினை பேச்சு தற்போது மத்திய அரசின் சின்னங்களை மாற்றும் அளவிற்கு சென்றுள்ளனர் திமுகவினர். சமூக வலைத்தளங்களில் Dravidian Stock, ஒன்றிய உயிரினங்கள் என பல திட்டங்கள் திடீரென உருவாக்கப்படுவதற்கு பின்னால் திமுகவின் 1962ம் ஆண்டு கோரிக்கை போன்ற ஏதேனும் சதித் திட்டம் தற்போது உள்ளதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் திமுகவினர் வெளியிட்டு வருவதாகவும் இதுபோன்ற அவதூறு செயல்களை செய்து வரும் திமுகவினர் மீது கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இது போன்ற அரசு முத்திரைகளை மாற்றும் வேலையை திமுகவினர் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துமாறு ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறோம் நிர்மல் குமார் கூறியிருக்கிறார்.இந்த விவகாரம் குறித்து நியூஸ் 18-க்கு நிர்மல் குமார் அளித்த பிரத்யேக பேட்டியில், “கூகுளில் ட்ரான்ஸ்லேட் செய்து, ஒன்றிய அரசு என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு, மத்திய அரசையும், மாநில அரசையும் பிரித்தாளுகின்றனர். மத்திய அரசு குறித்து மக்களிடையே தவறான அபிப்ராயத்தை இதன் மூலம் ஏற்படுத்த முயலுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திமுகவினர் சமூகவலைத்தளங்களில் ஒன்றிய அரசு, ஒன்றிய உயிரிணங்கள், Dravidian Stock போன்ற கோஷங்களை பிரிவிணைவாத உள்நோக்கத்துடன் திட்டமிட்டு ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இதனை வெறும் சொல்லாடலாக மட்டுமே எடுத்துக்கொள்ள இயலவில்லை. திமுக, பிரிவிணைவாத கோஷத்தை மீண்டும் கையிலெடுப்பதன் முன்னோட்டமாகவே இது பார்க்கப்படுகிறது என நிர்மல் குமார் தெரிவித்தார்.
Published by:Arun
First published: