ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா? சேலத்தில் துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை...

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா? சேலத்தில் துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை...

சேலத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சேலத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலத்தில் துப்பாக்கி  தயாரித்து கைதானவர்கள் தொடர்பாக  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று திடீர்  சோதனை நடத்தினர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே  கடந்த மே மாதம் 20ஆம் தேதி புளியம்பட்டி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு நபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போழுது அவர்கள்  துப்பாக்கிகள் வைத்திருந்தது தெரிய வந்தது .இருவரும் சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த இன்ஜினியர் சஞ்சய் பிரகாஷ் மற்றும் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி என தெரியவந்தது.இதனை அடுத்து  காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் சேலம் செட்டிச்சாவடி பகுதியில் உள்ள குரும்பம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. வீட்டில் துப்பாக்கி தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள், முகமூடிகள், வெல்டிங் மிஷின், கையுறைகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அழகாபுரத்தை சேர்ந்த கபிலன் என்பவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:தென்னிந்தியாவில் இந்தி படிப்பவர்களில் தமிழகம் முதலிடம்!

 

பின்னர் இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது, சேலம் மாநகர பகுதிகளில் உள்ள மலைகளில் கல்குவாரி அமைத்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க திட்டம் தீட்டியதாக தெரிவித்ததாக கூறப்படுகின்றது. மேலும் இவர்களிடம் இருந்து வீரப்பன், பிரபாகரன் ஆகியோரின் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது .இதனால் இவர்கள்  தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தொடர்பில் இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது.

இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்கள் மாற்றப்பட்டது.இதனிடையே இந்த வழக்கில் கைதான கபிலன் என்பவருக்கு ஜாமின் கிடைத்தது. சேலம் மத்திய சிறையில் உள்ள சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியவரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில் கடந்த மாதம் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் எஸ்பி தலைமையில் செட்டிச்சாவடி பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர் அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர்  திடீர் சோதனை மேற்கொண்டனர்.  வீட்டில் வேறு ஏதேனும் முக்கியமான ஆதாரங்கள் ஆவணங்கள் உள்ளனவா என்றும் ஆய்வு செய்தனர் தொடர்ந்து அப்பகுதி உள்ள மக்களிடமும் கேட்டறிந்தனர். தேசிய புலனாய் முகமை அதிகாரிகள் குரும்பம்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by:Arunkumar A
First published:

Tags: NIA, Salem