சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் நடத்திய சோதனையில், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு சதி திட்டம் தீட்டியதற்கான முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகளுடன் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். சென்னை மண்ணடியில் செயல்பட்டு வரும் "வஹாதத்தே இஸ்லாமி ஹிந்த்" அமைப்பின் அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு எஸ்.பி ராகுல் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வேப்பேரியில் உள்ள அந்த அமைப்பின் தலைவர் சையத் முகமது புகாரியின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதன் முடிவில் செல்போன்கள், மடிக்கணினி, ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து,கிண்டியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோன்று நாகை மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த அசன் அலி, மஞ்சக்கொல்லையை சேர்ந்த ஹாரிஸ் முகம்மது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தினர். இதில், மடிக்கணினி, ஹார்டு டிஸ்க், பென் டிரைவ், புத்தகங்கள், துண்டுபிரசுங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து அசன் அலி, ஹாரிஸ் முகம்மது ஆகியோரை நாகை எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். இதற்கு பின், இன்று காலை சென்னை அழைத்துவந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னை, நாகையில் நடைபெற்ற சோதனையில், 3 பேரும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருப்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதனடிப்படையில், 3 பேர் மீதும் சட்ட விரோத செயல்பாடு தடுப்புச் சட்டம், சதி வேலைக்கு நிதி திரட்டியது, தீவிரவாத குழுவை உருவாக்க முயற்சித்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 3 பேரையும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Also watch: ’குடிநீர் வேண்டுமா..’ ’குடும்பம் நடத்த வா’.. பெண்களுக்கு பாலியல் வலைவீசிய அரசு ஊழியர்கள்
Published by:Anand Kumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.