ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வேளச்சேரி நீர்வழிப் பாதையின் ஆக்கிரமிப்பை கூகுள் படங்கள் மூலம் மதிப்பிட வேண்டும்- வல்லுநர் குழுவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

வேளச்சேரி நீர்வழிப் பாதையின் ஆக்கிரமிப்பை கூகுள் படங்கள் மூலம் மதிப்பிட வேண்டும்- வல்லுநர் குழுவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டலம்

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டலம்

செயற்கைக்கோள் படம் மற்றும் கூகுள் படங்கள் மூலம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை, தற்போது இருந்த நிலை ஆகியவற்றை ஒப்பிட்டு, ஆக்கிரமிப்பின் வளர்ச்சி நிலை அறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

வேளச்சேரி நீர்வழிப் பாதையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பின் வளர்ச்சியை செயற்கைக்கோள் மற்றும் கூகுள் படங்கள் மூலம் மதிப்பிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வல்லுநர் குழுவுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரி மற்றும் பெருங்குடி பறக்கும் ரயில் நிலையங்கள் இடையே செல்லும் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு வருவதால், மழை காலங்களில் வெள்ளம் வடிவதில் சிக்கல் ஏற்படுவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதை அடிப்படையாக கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, வேளச்சேரி நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக ஆய்வு செய்ய, சென்னை மாவட்ட ஆட்சியர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரி, பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர், சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரிய மூத்த அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரி ஆகிய 5 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது.

Also read... திருநள்ளாறில் கொரோனா தடுப்பு விதிகளுடன் சனிப்பெயர்ச்சி திருவிழாவை நடத்த நீதிமன்றம் அனுமதி!

இக்குழு, தொடர்புடைய நீர்வழிப் பாதையின் வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் அங்கு செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நீர்வழித்தடத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்ததால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

மேலும், செயற்கைக்கோள் படம் மற்றும் கூகுள் படங்கள் மூலம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை, தற்போது இருந்த நிலை ஆகியவற்றை ஒப்பிட்டு, ஆக்கிரமிப்பின் வளர்ச்சி நிலை அறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய விவரங்கள் அடங்கிய ஆய்வறிக்கையை, இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளான பிப்ரவரி 8-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: National Green Tribunal