• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • என்.எல்.சி விபத்துக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு... உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு

என்.எல்.சி விபத்துக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு... உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு

விபத்து காட்சிகள்

விபத்து காட்சிகள்

நெய்வேலி என்.எல்.சி. 2வது அனல் மின் நிலையத்தில் மீண்டும் பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி. அனல் மின் நிலைய இரண்டாவது சுரங்கத்தில் இன்று காலை அதிக திறன் கொண்ட பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 23 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் கடலூர், திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டர். இதில் ஒப்பந்த தொழிலாளர்களான பத்மநாபன், அருண், வெங்கடேசன், நாகராஜன், சிலம்பரசன் உள்ளிட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய தொழிலாளர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபோன்று என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் முதலாவது சுரங்கத்தில் கன்வேயர் பெல்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அதே மாதம் அதே சுரங்கத்தில் சாரம் சரிந்து 7 பேர் படுகாயம் அடைந்தனர். மே 7ஆம் தேதி 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்தோடு, 20 பேர் படுகாயம் அடைந்த நிலையில், தற்போது மீண்டும் 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

என்.எல்.சி. இரண்டாம் அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 7 அலகுகள் உள்ளன. இவையணைத்தும் 1988 முதல் 1993ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் செயல்பாட்டுக்கு வந்தவை ஆகும். இந்த அனல்மின் நிலையத்தின் ஆயுட்காலம் 25 ஆண்டுகளே என்றாலும், புதிய அலகுகள் கட்டுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, பழைய அனல் மின் நிலையத்தில் தொடர்ந்து உற்பத்தி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, 2018ஆம் ஆண்டு மத்திய மின்சார ஆணையம் வெளியிட்ட தேசிய மின் திட்ட அறிக்கையில், என்.எல்.சி. 2வது அனல்மின் நிலையத்தில் காற்று மாசு தடுப்பு தொழில்நுட்பம் இல்லாததால், இவையனைத்திலும் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என கூறியிருந்தது. ஆனால், என்.எல்.சி. நிர்வாகம் தொடர்ந்து இந்த அனல்மின் நிலையத்தை இயக்குவதே விபத்துக்கள் நிகழ காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

என்.எல்.சி. விபத்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என கூறியுள்ளளார்.

என்எல்சி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக  தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் ஆட்சியர் சந்திரசேகர்சகாமுரி சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''என்எல்சி-யில் உள்ள அனைத்து அனல்மின்நிலையங்களில் உள்ள கொதிகலன் பாய்லர்களை ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அனல்மின் நிலையம் இரண்டில் மொத்தமுள்ள 7 யூனிட்டில் நாலு யூனிட் சரியில்லை. இதனை உயர்மட்ட குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின்படி பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை இந்த நான்கு யூனிட்டுகளில் மூடப்படும். மேலும் கடந்த 20 ஆண்டுகளில் என்எல்சியில் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவில்லை.

தற்போது உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கியது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார் தமிழக அரசுக்கு நன்றி“ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: