Home /News /tamil-nadu /

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆசிரியர் குணசேகரனுக்கு ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது!

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆசிரியர் குணசேகரனுக்கு ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது!

ஆசிரியர் குணசேகரன்

ஆசிரியர் குணசேகரன்

மக்கள் சார்பில், மக்களின் குரலை ஒலிக்க வேண்டிய ஊடகக் கடமையை தவறாது; வழுவாது மேற்கொண்ட நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பெருமைமிக்க ‘ராம்நாத் கோயங்கா’ விருது வழங்கப்பட்டிருக்கிறது

  • News18
  • Last Updated :
இந்திய ஊடகவியலாளர்களின் மதிப்புமிக்க விருதாக கருதப்படும், தலைசிறந்த ஊடகவியலாளருக்கான ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ நியூஸ் 18 தமிழ்நாடு முதன்மை ஆசிரியர் மு.குணசேகரனுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விருதை வழங்கினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்கா நூற்றாண்டையொட்டி, அவரின் நினைவுகளை போற்றும் வகையில், கடந்த 2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு ’ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன. பத்திரிகையாளர்களின் நேர்மையான, மிகச்சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய ஊடகவியலாளர்களின் மதிப்புமிக்க நிகழ்வாக கருதப்படும் இந்த விருது வழங்கும் விழாவில், பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கிடையே தங்கள் பணியை துணிச்சலுடனும், அர்ப்பணிப்புடனும் மிகச்சிறப்பாக மேற்கொண்டு வரும் அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகவியலாளர்கள் கெளரவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில், பிராந்திய மொழியில் ஒரு நிகழ்வு அல்லது மக்கள் பிரச்னையை முழுமையாக ஆராய்ந்து விரிவாகவும், அழுத்தமாகவும், அம்மாநிலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பதிவு செய்யும் அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகவியலாளருக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

2017 ம் ஆண்டுக்கான விருதுகளை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, பேராசிரியை பமீலா பிலிப்போஸ் ஆகியோரைக் கொண்ட நடுவர்குழு தேர்வு செய்தது.

அதன்படி, 2017ம் ஆண்டுக்கான விருதுகளில், பிராந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய ஊடகவியலாளருக்கான விருதுக்கு, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் மு.குணசேகரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவ்விருதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். சிறந்த ஊடகவியலாளருக்கான விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

ஓகி புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான குமரி கடலோரத்தில் களத்தில் இருந்து செயலாற்றி, பிரச்னைகளின் வேர்களைக் கண்டறிந்து களநிலவரத்தை மக்களிடம் கொண்டு சென்றதற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் மு.குணசேகரன். ஒகி புயலின் பாதிப்பையும், மீனவர்கள் சந்தித்த துயரையும் ஒரு மணி நேர ஆவணப்படமாகவும், `களத்தில் இருந்து மக்களின் உணர்வுகளை ’காலத்தின் குரல்’ விவாத நிகழ்வின் மூலமாக தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்தது; மீனவ சமூகத்தில் குறிப்பாக பெண்கள் படும் துயரை தொடர் நேரலைகள் மூலம் உலகறியச் செய்தது ஆகியவற்றுக்காக இவ்விருதுக்கு மு.குணசேகரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஊடகவியலாளர்களால் தேசிய விருதுக்கு இணையாக கருதப்படும், பெருமதிப்புமிக்க இவ்விருதை தமிழ் ஊடகங்களில் இருந்து பெறும் முதல் பத்திரிகையாளர் மு.குணசேகரன் என்பதும், இந்த விருதுக்கு தேர்வான முதல் தமிழ் ஊடகம் நியூஸ் 18 தமிழ்நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

2017-ம் ஆண்டின் இறுதியில், தமிழ்நாட்டின் தென்முனையாகிய குமரி மாவட்டத்தை ‘ஒக்கி’ புயல் மிக மோசமாகத் தாக்கியது. கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கிக்கொண்டனர். பல நூறு நாட்டிக்கல் மைல் தொலைவில் அரபிக் கடலில் தத்தளித்த அந்த மீனவர்களின் அவலநிலை பெரிய அளவுக்கு பேசப்படாமல் இருந்தது. அந்நிலையில்தான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக்காட்சி ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களுக்கு நேரில் சென்றது.


தங்கள் அன்புக்குரிய ஆண்களை கடலுக்குள் அனுப்பிவிட்டு காத்திருந்த பெண்கள், என்ன செய்வது என செய்வதறியாது திகைத்து நின்றனர். தங்கள் குரலை கேட்க யாருமே வரவில்லை என பரிதவித்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் 30 பேர், 50 பேர் என்று கடலுக்குச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. நாட்கள் செல்ல, செல்ல அவர்கள் உயிரோடு மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையையும் மக்கள் இழக்கத் தொடங்கினார்கள்.
இந்த சூழலில் ஒக்கி புயல் பாதிப்பின் தீவிரத்தையும், அது கடல்புறத்து மக்களின் வாழ்வில் உருவாக்கியிருக்கும் கொந்தளிப்பான தாக்கத்தையும் இடைவிடாமல் ஒளிபரப்பியது நியூஸ் 18. நேரலையாகவும், செய்திப் பதிவுகளாகவும் மட்டுமல்ல… மீனவ கிராமங்களின் மக்களை ஒன்றுசேர்த்து கடற்கரையில் இருந்து விவாத நிகழ்ச்சிகளையும் நடத்தியது. ’கதறும் கடற்புரம்’ என்ற தலைப்பில் ஒக்கி புயலின் பாதிப்பை வீச்சுடன் உணர்த்தும் ஆவணப்படம் ஒன்றையும் ஒளிபரப்பியது.

பல நூறு நாட்டிக்கல் தொலைவில் நடுக்கடலில் சிக்கிக்கொண்ட மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என பொது சமூகத்தில் உருவான எண்ணவோட்டத்துக்கு நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகள் பெரும் உதவி செய்தன. கடலோரத்திலும், கடலின் நடுவிலும் மீனவர்களின் வாழ்க்கை முறை குறித்த ஒரு புரிதலை உருவாக்கவும் இந்த செய்திகள் துணை நின்றன.
மக்கள் சார்பில், மக்களின் குரலை ஒலிக்க வேண்டிய ஊடகக் கடமையை தவறாது; வழுவாது மேற்கொண்ட நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பெருமைமிக்க ‘ராம்நாத் கோயங்கா’ விருது வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானது.



 
Published by:Rahini M
First published:

Tags: Cyclone Ockhi

அடுத்த செய்தி