நியூஸ் 18 செய்தி எதிரொலி - ஒரு மாதத்திற்கு பிறகு அமைச்சர்கள் கொடுத்த காசோலையை ஏற்றுக் கொண்ட வங்கி - மகளிர் குழு மகிழ்ச்சி

நியூஸ் 18 செய்தி எதிரொலி -  ஒரு மாதத்திற்கு பிறகு அமைச்சர்கள் கொடுத்த காசோலையை ஏற்றுக் கொண்ட வங்கி - மகளிர் குழு மகிழ்ச்சி

நியூஸ் 18 செய்தியின் எதிரொலியாக இன்று  மகளிர் சுய உதவிக் குழுவினர் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கோவில்பட்டியில் அமைச்சர்கள் கொடுத்த காசோலையை ஏற்க மறுத்த வங்கி குறித்து நியூஸ்18 வெளியிட்ட செய்தி எதிரெலியாக ஒரு மாதத்திற்கு பின் காசோலையை வங்கி ஏற்றுக் கொண்டுள்ளதால் மகளிர் குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது இளம்புவனம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 6 மகளிர் சுய உதவி குழுக்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் கூட்டுறவு வங்கி பெருங் கடனுக்காக விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களுடைய இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு கடந்த மாதம் 21ந்தேதி கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ ஆகியோர் ஆறு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் 60 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தங்களுக்கு கடன் கிடைத்த மகிழ்ச்சியில் மகளிர் குழுவினர் இளம்புவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று அமைச்சர்கள் கொடுத்த காசோலையை கொடுத்தபோது எட்டயபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கு சென்று பணம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அங்கு சென்றபோது ஆதார். பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை முதலில் கேட்டுள்ளனர்.

இதையடுத்து மகளிர் சுயஉதவிக் குழுவினர் கேட்ட ஆவணங்களை கொண்டு கொடுத்தபோது , ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியாக கணக்கு தொடங்க வலியுறுத்தியுள்ளனர். அதனையும் மகளிர் குழுவினர் செய்துள்ளனர். ஆனால் அதன் பின்னரும் கடன் தொகை வழங்கப்படாமல் இருந்தது.‌ இதற்கிடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடனை தள்ளுபடி செய்ததால் இளம்புவனம் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுக்கு காசோலை வழங்கப்பட்ட தேதியில் பணம் வரவு வைக்க வேண்டும் என்று மகளிர் குழுவினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இது குறித்த செய்தி நேற்று நமது நியூஸ் 18 தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.  செய்தியின் எதிரொலியாக இன்று  மகளிர் சுய உதவிக் குழுவினர் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மகளிர் குழுவினை சேர்ந்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமன்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஒரு மாத காலமாக தங்கள் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மகளிர் சுய உதவிக் குழுவினை சேர்ந்த பாக்கியலட்சுமி கூறுகையில் காசோலையை பெற்று ஒரு மாத காலமாக பணம் கிடைக்காமல் மிகுந்த வேதனையில் இருந்தோம். ஒவ்வொரு நாளும் அலைச்சல் தான் இருந்தது பணம் கிடைக்கவில்லை. எங்கள் பிரச்சினை குறித்து அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக நியூஸ்18 தொலைக்காட்சி செய்தி மூலமாக வெளிப்படுத்தினோம்.

அதன் தொடர்ச்சியாக இன்று எங்களது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ,துணை முதல்வர் ,‌ தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ, விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன் மற்றும் இளம்புவனம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் பெரிதும் உதவி செய்துள்ளனர். அதற்காக அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களது பிரச்சனையை அரசுக்கு தெரியப்படுத்த நியூஸ் 18 தொலைக்காட்சி  முதலில் செய்தி‌ வெளியிட்டது. மகளிர் குழுக்கள் சார்பாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு எங்களுடைய மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
Published by:Vijay R
First published: