நியூஸ்18 செய்தி எதிரொலி... வடசென்னையில் போலி மருத்துவர்கள் ஓட்டம்

ஆங்கில மருத்துவம் பயிலாத மருத்துவர்களிடம் சிகிச்சை மேற்கொள்வதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 • Share this:
  நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தி எதிரொலியாக, வடசென்னையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். ஒரு கிளினிக் இழுத்து மூடப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான மருத்துவர்களை தேடி வருகின்றனர். வட சென்னை பகுதிகளான ராயபுரம், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில், யுனானி, பிசியோதெரபி,சித்தா போன்ற மருத்துவ படிப்புகளை படித்துள்ள மருத்துவர்கள், அவர்களுக்குத் தொடர்பில்லா, ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தகவல் கிடைத்தது.

  நமது குழு அந்த இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டதில், பிற மருத்துவப் படிப்புகள் முடித்த 5 மருத்துவர்கள், ஆங்கில மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது. உரிய வீடியோ ஆதாரங்களுடன் கடந்த 2 நாட்களாக நியூஸ் 18 தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகின இதையடுத்து செவ்வாய் மாலை, சுகாதாரத் துறை அதிகாரிகள், வடசென்னையில் குறிப்பிட்ட இடங்களுக்கு நேரில் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கொடுங்கையூரில் உள்ள அனீஸ் அகமத் என்ற யுனானி மருத்துவரின் ஸ்டார் கிளினிக் என்ற இடத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். சோதனையின் போது அவரது மருத்துவப் படிப்புக்குத் தொடர்பில்லாத ஆங்கில மருந்துகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.  அதிகாரிகள் சோதனையிடுகின்றனர் என்ற தகவல் வெளியானதும், மற்ற மருத்துவர்கள் தங்கள் கிளினிக்குகளை மூடிவிட்டுத் தலைமறைவாகி விட்டனர். ஆங்கில மருத்துவத்தை மேற்கொள்ள குறைந்த பட்சம் MBBS படித்திருக்க வேண்டும் எனவும், யுனானி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளில் பயின்றவர்கள் உயிர் போகும் அவசரக் காலம் தவிர, பிற தருணங்களில் ஆங்கில மருந்தையோ, ஊசியையோ பயன்படுத்தக்கூடாது எனவும் தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்கத்தின் விதிகள் தெரிவிக்கின்றன.

  Also Read : கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடையூறு.. பெற்ற மகனுக்கு சூடுவைத்து துன்புறுத்திய தாய் - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்

  ஆங்கில மருத்துவம் பயிலாத மருத்துவர்களிடம் சிகிச்சை மேற்கொள்வதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் அதிகாரிகள் சென்னை முழுவதும் சோதனை மேற்கொண்டு, போலி மருத்துவர்களைக் கண்டறிவார்களா? இந்த நடவடிக்கை தமிழக அளவில் தீவிரமாக முன்னெடுக்கப்படுமா? என்பது போகப் போகத் தான் தெரியும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: