NEWS18 ECHO ATHIVARADHAR VAIBHAV TICKET SCAM INVESTIGATION STARTED BY HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT VAI
நியூஸ்18 எதிரொலி.. அத்திவரதர் வைபவ டிக்கெட் முறைகேடு.. களத்தில் இறங்கிய இந்து அறநிலையத்துறை..
நியூஸ் 18 செய்தி எதிரொலியாக, காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்து இந்து சமய அறநிலையத் துறை நியமித்துள்ள மூவர் குழு விசாரணையில் இறங்கியுள்ளது. கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடந்து வருகிறது. அறநிலையத் துறை எடுத்த நடவடிக்கை என்ன?
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் காஞ்சி அத்திவரதர் வைபவத்தில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்த தகவல்களை நியூஸ் 18 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை இதுகுறித்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் நடந்த வரவு செலவு குறி்த்து சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த காசிமாயன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். அத்திவரதர் தரிசன டிக்கெட் குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்கு மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் முரண்பாடான பதில்களை வழங்கின.
வி.ஐ.பி, வி.வி.ஐ.பி., உபயதாரர் பாஸ்கள் விற்பனை செய்யப்படவில்லை, அச்சடிக்கவில்லை என்றும், செய்தியாளர்களுக்கு என தனியாக பாஸ்கள் வினியோகம் செய்யப்படவில்லை என்றும் முதலில் மாவட்ட நிர்வாகம் பதில் வழங்கியது. ஆனால் விஐபி, விவிஐபிக்கள், மொத்தம் 12 லட்சம் பேர் தரிசனம் செய்தனர் என்று கூறியது மாவட்ட நிர்வாகம். கோவில் நிர்வாகமோ 350479 பேர் தரிசனம் செய்ததாக கூறியுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் 500 ரூபாய்க்கு டிக்கெட் விற்ற வகையில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்றது கோவில் நிர்வாகம்.
மேலும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் விற்ற வகையில் ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக கோவில் நி்ர்வாகம் கூறியுள்ளது. கோவில் நிர்வாகம் தந்த பதிலின்படி இருவகையிலும் சேர்த்து மொத்தமாக 3 கோடியே 70 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைத்துள்ளது.
விஐபிக்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டின் குறைந்த பட்ச விலை 300 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 45 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்திருக்க வேண்டும். இவ்வளவு முக்கியமான வரலாற்று முக்கியத்துவம் பொருந்திய நிகழ்ச்சிக்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படவில்லை என்று மாவட்ட நி்ர்வாகமும் கோவில் நிர்வாகமும் பதில் அளித்திருந்தன.
இதுகுறித்து நியூஸ் 18 தொலைக்காட்சி 3 சிறப்பு செய்தித் தொகுப்புகளை ஒளிபரப்பியிருந்தது. அதன் எதிரொலியாக, , டிக்கெட் விற்பனைகள் குறித்து ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார்.
திருவேற்காடு இணை ஆணையர் லட்சுமணன் தலைமையிலான மூவர் குழு, வியாழக்கிழமை, ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த ஆவணங்களை, காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் வைத்து சரிபார்க்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், உதவி ஆணையர் ஜெயா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். 3 மணிநேரத்திற்கு மேல் நடந்த விசாரணையை அடுத்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இந்த ஆய்வும் விசாரணையும் தொடர்ந்து நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.