திருமணமாகி கணவன் வீடு புகுந்த கெளசல்யா, தனது வாழ்க்கை 2 மாதங்களிலேயே முடிந்து விடும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார். கணவனுக்கும் அவரது அண்ணிக்குமான தகாத உறவு, கெளசல்யா தற்கொலைக்கு காரணமாகியுள்ளது என்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. நடந்தது என்ன?
சிவகங்கை மாவட்டம் நன்னியாவூரைச் சேர்ந்தவர் 19 வயதான கௌசல்யா. இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாகவயல் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான பாக்கியராஜ்க்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. இருவரும் ஆர்.எஸ். மங்கலம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.செப்டம்பர் 30-ஆம் தேதி கணவன் வெளியூர் சென்றிருந்த நிலையில், கௌசல்யா தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கௌசல்யாவின் கை கால்களில் காயங்கள் இருந்தன. வீட்டின் சுவர்களில் ரத்தக் கறைகள் காணப்பட்டன.
தூக்கிட்ட நிலையில் இறந்ததாக சொல்லப்படும் கௌசல்யாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்த வழக்கில் கடந்த ஒன்றரை மாதம் நடந்த போலீசார் விசாரணையின் இறுதியாக, கெளசல்யாவின் கணவன் பாக்கியராஜும் அவரது அண்ணி ஜோதியும் கைதாகியுள்ளனர்.
பாக்கியராஜின் அண்ணன் குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அதனால் அவரது மனைவி ஜோதி, தனது குழந்தைகளுடன் கணவன் வீட்டில் வசித்து வருகிறார். அதே வீட்டில் தான், பாக்கியராஜும் கெளசல்யாவும் தங்கள் புதுக்குடித்தனத்தை தொடர்ந்துள்ளனர்.
மேலும் படிக்க..
திருமணத்திற்கு முன் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்த முயன்ற மணமக்கள் பாிதாப பலி
அப்போது ஒருநாள், பாக்கியராஜும் அவரது அண்ணி ஜோதியும் தகாத நிலையில் இருந்ததைப் பார்த்து கெளசல்யா அதிர்ச்சியடைந்துள்ளார். கணவனிடம் இதுகுறித்து கேட்டபோது, திருமணத்திற்கு முன்பே தனக்கும் தனது அண்ணிக்கும் உறவு இருந்ததாகவும் இனி அதைக் கைவிட முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறுகள் நடந்துள்ளன.கெளசல்யா வீட்டில் இருந்தால் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என நினைத்துள்ளார் கணவன் பாக்கியராஜ். அதனால், திருமணத்தின் போது வரதட்சணையாக வர வேண்டிய நகையில் மீதி தர வேண்டிய நகையை வாங்கி வரும்படி அடிக்கடி கெளசல்யாவுடன் சண்டை போட்டு வீட்டிற்கு அனுப்பி விடுவார்.
கணவனின் தகாத உறவால் ஏற்பட்ட மன உளைச்சல், அவரது வரதட்சணைக் கொடுமையால் ஏற்பட்ட நெருக்கடி ஆகியவற்றைத் தாங்க முடியாத கெளசல்யா தற்கொலை முடிவை நாடியுள்ளார். சம்பவத்தன்று கத்தியால் கைகளை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போதும் அவரது உயிர் போகாததால், மின்விசிறியில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது, இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் பாக்கியராஜ் மற்றும் அவரது அண்ணி ஜோதி மீது ஆர்எஸ் மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செயதனர். பின்னர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆசை ஆசையாக வாழ வந்த இளம்பெண், கணவனின் தகாத உறவால் தன்னையே மாய்த்துக் கொண்ட சம்பவம், ஆர்.எஸ். மங்கலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.