அ.தி.மு.க வேட்பாளர் மகன் காரிலிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி: புதரிலிருந்து எடுத்தாக மாற்றிய ஆட்சியர் - திருச்சி அரசியல் களத்தில் பரபரப்பு

Youtube Video

திருச்சியில் பறக்கும் படை அதிகாரிகளால் 1 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் புதுப் புது திருப்பங்கள் ஏற்பட்டு அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
திருச்சி மாவட்டம் முசிறியில், அ.தி.மு.க வேட்பாளரின் மகன் காரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதரில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும் எஸ்பியும் அறிக்கையை மாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி - கரூர் சாலை பேட்டைவாய்த்தலை பகுதியில் மார்ச் 23ம் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக சென்ற வெள்ளை நிற இனோவா காரை நிறுத்தி சோதனையிட முயன்றனர். அப்போது காரில் இருந்தவர்கள், காரில் இருந்து ஒரு மூட்டையை வெளியே வீச முயன்றதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் சாக்குமூட்டையைக் கைப்பற்றிப் பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

காரில் தொட்டியம் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்திய ராஜா, எம்.எல்,ஏ செல்வராஜின் ஓட்டுநர் ஜெயசீலன் மற்றும் ஒருவர் என நான்கு பேர் பயணித்தது தெரியவந்தது

முதற்கட்ட விசாரணையில், அந்தக் கார் முசிறி தொகுதி அதிமுக வேட்பாளர் செல்வராஜின் மகன் ராமமூர்த்திக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. இதனையடுத்து பணத்துடன் காரை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் ஸ்ரீரங்கம் துணை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவிற்கு தகவல் அளித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் ரொக்கம் திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அலுவலர்கள் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டதில் ஒரு கோடி ரூபாய் இருந்தது. பணம் மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து, மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசு, காவல் கண்காணிப்பாளர் ராஜன், ஸ்ரீரங்கம் துணை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் மார்ச் 25ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், காரிலிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக துணை ஆட்சியர் அளித்த அறிக்கையை, ஆட்சியரும், எஸ்.பி.யும் மாற்றி புதரிலிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டதாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல, போலீஸாரின் அறிக்கையிலும் புதரிலிருந்தே பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் பறிமுதல் தொடர்பாக வருமானவரித் துறையினர் உள்ளிட்ட உயர்அதிகாரிகளுக்கு மூவரும் தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கோடி பணம் பறிமுதல் தொடர்பாகவும், காவல் நிலையத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி விளக்கம் அளித்துள்ளார்.

சிறப்பு தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே திருச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிடோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சதிவலை பின்னப்பட்டுள்ளதாக திமுக கடுமையாக சாடியுள்ளது. காரில் கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய், புதரில் இருந்து எடுக்கப்பட்டதாக போலீஸ் அறிக்கையில் மாற்றப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: