குடிக்கு ஆசை.... நண்பருக்கே திருமணம் செய்து வைத்த தந்தை... 3 நாளில் பெண் தற்கொலை...!

யாருக்கும் தெரியாமல் சங்கருக்கும் மகாலெட்சுமிக்கும் கோயில் ஒன்றில் திருமணம் நடந்தது. 

  • News18
  • Last Updated: May 5, 2020, 7:18 AM IST
  • Share this:
குடிக்கு ஆசைப்பட்ட தந்தை, தன் மகளுக்குத் தந்தை வயதுள்ள நண்பரையே திருமணம் செய்து வைத்துள்ளார், மனம் நொறுங்கிய மணப் பெண், திருமணம் ஆன மூன்றே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சோக சம்பவம், வேலுார் மாவட்டத்தில் நடந்துள்ளது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வடுகந்தாங்கல் EB காலனியைச் சேர்ந்தவர்கள் சாந்தகுமார் - சம்பூர்ணம் தம்பதி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்; இந்த நிலையில் தாய் சம்பூர்ணம் ஆறு மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார்

குடிக்கு அடிமையான தந்தை சாந்தகுமாரும், அதே பகுதியில் பழக்கடை நடத்தி வரும் 45 வயதான சங்கரும் நண்பர்கள்,  எப்போதும் மதுபோதையில் உள்ள சாந்தகுமாரின் குடும்பத்திற்கு அவ்வப்போது தன்னாலான உதவிகளை சங்கர் செய்து வந்துள்ளார்.


45 வயதாகியும் சங்கருக்கு திருமணம் ஆகாத நிலையில், தன் மகள் மகாலட்சுமியை அவருக்குத் திருமணம் செய்து வைக்க சாந்தகுமார் முடிவு செய்துள்ளார். மகளின் எதிர்ப்பையும் மீறி ஏப்ரல் 29 ஆம் தேதி விரிஞ்சிபுரத்தில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் நடத்தியுள்ளார்.

யாருக்கும் தெரியாமல் சங்கருக்கும் மகாலெட்சுமிக்கும் அந்தக் கோயிலில் திருமணம் நடந்தது. திருமணம் ஆன மூன்று நாட்களும் தம்பதி, மணமகள் வீட்டில் இருந்துள்ளனர்.

கனவுகளுடன் இருந்த மகாலட்சுமி, தனது தந்தையின் கட்டாய நடவடிக்கையால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மே 1ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மகாலட்சுமி.வீட்டிற்கு வந்த கணவர் சங்கர், மனைவி மகாலட்சுமி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்த போலீசார், சடலத்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், திருமணம் ஆன மூன்றே நாளில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தந்தை வயதுள்ள நபருக்கு தன்னை திருமணம் செய்து கொடுத்ததால் திருமணமான மூன்றே நாட்களில் மணப்பெண் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடுகந்தாங்கலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


First published: May 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading