தமிழகத்தில்
பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்றும் தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக நிர்வாகிகளின் புதிய பட்டியலில், பொதுச் செயலாளராக விருப்பம் தெரிவித்திருந்த நயினார் நாகேந்திரனுக்கு, துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு, சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் நயினார் நாகேந்திரனிடம் இருந்து துணை தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
அதேபோல் துணைத்தலைவரிலிருந்து பொதுச் செயலாளராக பதவி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்த வி.பி.துரைசாமி அதே பொறுப்பில் நீடிக்கிறார்.
பொதுச் செயலாளராக இருந்த கரு.நாகராஜனுக்கு துணைத்தலைவர் பதவி மாற்றி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கே.பி.ராமலிங்கம், அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோரும் மாநிலத் துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், பொதுச்செயலாளர்கள் பட்டியலில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், பாஜக மாநில பொதுச் செயலாளர்களாக எம்.முருகானந்தம், ஏ.பி.முருகானந்தம், சீனிவாசன், கார்த்தியாயினி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் இணைந்த கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் மீண்டும் நீக்கம் செய்யப்பட்டு பெப்சி சிவக்குமார் நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதினத்துக்கு பல்லக்கு சுமப்பது எங்கள் சமய உரிமை.. பல்லக்கு சுமப்பவர்கள் திட்டவட்டம்
ஊடக பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ். பிரசாத் நீக்கம் செய்யப்பட்டு ரங்கநாயகலு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து வினோஜ் பி.செல்வம் நீக்கம் செய்யப்பட்டு புதிய தலைவராக ரமேஷ் சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்த வினோஜ் பி.செல்வத்திற்கு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மகளிரணி தலைவராக உமாரதி, SC அணி தலைவராக தடா.பெரியசாமி, ST அணி தலைவராக சிவப்பிரகாசம், சிறுபான்மையினர் அணி தலைவராக டெய்சி சரண், OBC அணி தலைவராக சாய்சுரேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.