மினி கிளினிக்குகளில் புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் - அரசு மருத்துவர்கள் கோரிக்கை

மினி கிளினிக்குகளில் புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் - அரசு மருத்துவர்கள் கோரிக்கை

கோப்பு படம்

மினி கிளினிக்குகளில் புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share this:
தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கும் மினி கிளினிக்குகளில் புதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியார்களை நியமிக்க வேண்டும் எனவும் வேறு இடங்களில் இருந்து மாற்றி பணியமர்த்தக் கூடாது எனவும் அரசு மருத்துவர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து அவை படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.  இந்த கிளினிக்குகளில் 835 மருத்துவர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். மற்ற பணியிடங்களுக்கு பள்ளி சிறார் நலத்திட்டம் மற்றும் குறைவான  புறநோயாளிகள் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் மாற்றி பணியமர்த்தப்படுவார்கள் என சுகாதாரத்துறை அரசாணையில்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மினி கிளினிக்குளில் புதிய மருத்துவர்களையே பணியமர்த்த வேண்டும் என அரசு மருத்துவர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில் மற்றும் செயலாளர் ரவிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளி சிறார் நலத்திட்டம் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் திட்டத்திலிருந்து மருத்துவர்களை ஏன் மாற்ற வேண்டும்”. “காலை 9 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை என்ற கால நேரத்தால் ஒரு மருத்துவர் பத்து மணி நேரம் வரை பணி செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. முறையான பராமரிப்பு இல்லாத இணை சுகாதார கட்டிடங்களில் 11 மணி முதல் 4 மணி வரை மருத்துவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இருக்குமா” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பாக அதன் துணைத் தலைவர் அகிலன் விடுத்துள்ள அறிக்கையில் “2018ம் ஆண்டு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேசர்ச்சிப் பெற்று காத்திருப்புப் பட்டியலில் இருப்போரை மினி கிளினிக்குகளில் பணியமர்த்த வேண்டும். மினி கிளினிக்குகள் மாலையிலும் இயங்கும் என்ற அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். வழக்கமான ஞாயிற்றுகிழமை விடுப்பு அல்லாமல் சனிக்கிழமை விடுப்பு என்பதை மாற்ற வேண்டும் ” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Also read: 2021-ல் யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

அதே போன்று ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் இது குறித்து பேசுகையில் “மினி கிளினிக்குகள் நல்ல திட்டம் தான். ஆனால் மருத்துவர்களை புதிதாக நியமித்தால் தான் அதன் பலன் முழுமையாக அனைவரையும் சென்றடையும். அது மட்டுமல்லாமல் பத்து மணி நேரத்துக்கு மேல் பணிபுரியும் மருத்துவர்களுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பையும்  உறுதிப்படுத்த வேண்டும்.” என தெரிவித்தார்.

அரசு மருத்துவர்களின் கோரிக்கை குறித்து கிண்டி கிங் மருத்துவமனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில் “புதிதாக 835 மருத்துவர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்படுவர். மருத்துவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் அமையும் 200 மினி கிளினிக்குகளில் பணி செய்ய விருப்பமுள்ள வெளி மாவட்ட மருத்துவர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட சுகாதார இணை இயக்குநர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவில் “நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக அரசு மருத்துவர்களை மாற்றி பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே சென்னை மாநகராட்சியில் உள்ள மினி கிளினிக்குகளில் பணி செய்ய விருப்பமுள்ள மருத்துவர்கள் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும். இதை அவசரமாக கருதி உடனே தகவல்களை கொடுக்கவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், "புதிய மருத்துவர்கள் பல கட்ட நடைமுறைகளை தாண்டி தான் பணிக்கு வர இயலும். அது வரை காத்திருக்க முடியாது. நான்கு அல்லது ஐந்து மருத்துவர்கள் இருக்கும் பட்சத்தில் அங்கிருந்து ஒருவரை சென்னைக்கு வரவழைக்கிறோம். மேலும் மருத்துவர்கள் நியமிக்கும் முன் ஏற்கெனவே பணியில் உள்ள மருத்துவர்களுக்கு அவர்கள் விருப்ப இடங்களுக்கு மாற வாய்ப்பு அளிப்பது வழக்கமான ஒன்று தான்" என விளக்கம் அளித்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: