• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கடலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல் - 4 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

கடலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல் - 4 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

Youtube Video

கடத்தப்பட்டு நான்கே மணிநேரத்தில் பச்சிளங் குழந்தையை மீட்ட கடலுார் டிஎஸ்பி சாந்தி தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் பிறந்து ஒருநாளே ஆன பச்சிளம் பெண் குழந்தை கடத்தப்பட்ட நான்கே மணிநேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த விசூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன்- பாக்கியலட்சுமி தம்பதி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி கருவுற்று, அடுத்த குழந்தையின் மகப்பேறுக்காக, வெள்ளிக்கிழமை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். சனிக்கிழமை மாலை 4 மணியளவில் மணிகண்டனின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் வார்டில் சென்று பார்த்தபோது பிறந்த குழந்தையைக் காணவில்லை.

    விசாரித்தபோது மணிகண்டனின் தாய் கேட்டதாக, கறுப்பு நிற சுடிதார் அணிந்த பெண் துாக்கிச் சென்றதாக பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார். பதற்றமடைந்த உறவினர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் மூலம் புதுநகர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

    போலீசார் மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கறுப்பு நிற சுடிதார் அணிந்த பெண் பச்சிளங் குழந்தையைத் துாக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி அந்தப் பெண் கடலூர் பேருந்து நிலையத்தில் இறங்கி விட்டது தெரியவந்தது.

    தொடர் விசாரணையில் அங்கிருந்து புதுச்சேரி பேருந்தில் ஏறிச் சென்ற அந்த மர்மப் பெண், அங்கிருந்து ஆட்டோ மூலம் புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அங்கு அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து பச்சிளங் குழந்தையையும் மீட்டனர்.

    கடலுார் மற்றும் புதுச்சேரி பேருந்து நிலையங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடும், புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு விட்ட தேவா என்ற ஓட்டுநர் உதவியாலும் குழந்தையைக் கடத்திய பெண் சிக்கினார். விசாரணையில் அந்தப் பெண் புதுச்சேரி கிருமாப்பாக்கம் பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்த லாவண்யா என்பது தெரியவந்தது.

    மேலும் படிக்க... பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்... போக்குவரத்தில் மாற்றம்

    குழந்தையை ஏன் கடத்தினார் என்பது குறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்டு நான்கே மணிநேரத்தில் பச்சிளங் குழந்தையை மீட்ட கடலுார் டிஎஸ்பி சாந்தி தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: