கடந்த 2017ம் ஆண்டிலிருந்து செயல்படாத செல்போன் டவர் கண்காணிப்பில் இல்லாதபோது டவர் திருடப்பட்டு இருப்பதாக, செல்போன் டவரை அமைத்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தியதில் டவர் அமைத்த நிறுவனத்திற்கு சொந்தமான 600 செல்போன் டவர்கள் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
செல்போன் டவர் அமைக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனமானது, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னையில் புரசைவாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வணிக வளாகத்தில் இதன் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுமையும் 26,000 செல்போன் டவர்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு பராமரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு குறிப்பிட்ட தனியார் டவர் சேவை நிறுவனம் தங்கள் சேவையை நிறுத்தியது. இதனால் அந்த நெட்வொர்க் சேவை நிறுவனத்திற்காக இந்தியா முழுவதும் நிறுவப்பட்ட செல்போன் டவர்கள் செயல்படாமல் இருந்து வந்தன. தமிழகத்தில் இருக்கும் செல்போன் டவர்கள் செயல்படாமல் இருந்த போது அதை கண்காணித்து வந்த நிறுவனங்கள், கொரோனா காலகட்டத்தில் டவர் இருக்கும் இடத்திற்குச் சென்று கண்காணித்து பராமரிப்பை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் செயல்படாது இருந்த செல்போன் டவர்களை வேறு நெட்வொர்க் தேவைக்காக பயன்படுத்துவதற்கு ஆய்வு மேற்கொள்ள சென்றபோது, சில மாவட்டங்களில் டவர்கள் மாயமாகி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக டவர் அமைந்திருக்கும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட செல்போன் டவர் அமைக்கும் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து செயல்படாத செல்போன் டவர்களில் நிலைமை குறித்து தமிழகம் முழுவதும் அடுத்தடுத்த ஆய்வு மேற்கொண்டதில் 600க்கும் மேற்பட்ட டவர்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தை சாதகமாக பயன்படுத்தி மர்ம கும்பல் ஆளில்லாமல் கண்காணிப்பு இல்லாமல் இருக்கும் தங்களது செல்போன் டவர்களை திருடி செல்வதாக பாதிக்கப்பட்ட நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
தொடர்ந்து இதுபோன்று பல டவர்கள் இருப்பதாகவும் அந்த டவர்கள் திருடு போகாமல் இருக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக ஒரு செல்போன் டவர் அமைப்பதற்கு 25 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் செலவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மாயமாகியதன்மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கள் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் செல்போன் டவர்களை திருடும் போது சில மர்ம கும்பலை கையும் களவுமாக பிடித்து கொடுத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து தங்களுக்கு சொந்தமான செல்போன் டவர்கள் மாயமாகி வருவதாகவும், தங்களைப் போன்று மற்ற செல்போன் டவர் அமைக்கும் நிறுவனங்களுக்கு சொந்தமான செல்போன் டவர்கள் மாயமாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.