கே.எஸ்.அழகிரி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் - நெல்லைக் கண்ணன் வலியுறுத்தல்

கே.எஸ்.அழகிரி, நெல்லைக் கண்ணன்

கே.எஸ்.அழகிரி, தனது கட்சி பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நெல்லை கண்ணன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் காமராஜர் கடல் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான, கமலம் அழகிரி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் முறையான விதிகளை  பின்பற்றாததால் 5 ஆண்டு காலத்துக்கு கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்துசெய்து, கடந்த ஜனவரி மாதம் கப்பல் போக்குவரத்து பொது இயக்குனர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். மேலும், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத கல்வி கட்டணத்தை திரும்ப தர வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நெல்லை கண்ணன், ‘கே.எஸ்.அழகிரி நிர்வாகித்து வந்த  கல்லூரியில் படித்த 80 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மோசடி புகாரில் சிக்கிய கே.எஸ்.அழகிரி தாமாகவே முன் வந்து தன்னுடைய கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது காமராஜருக்கும், காங்கிரஸுக்கும் செய்யும் மரியாதையாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
கட்சிக்கான மரியாதையை ஒரு தலைவன் காப்பாற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற பதவிவை விட்டு விலகுவதுதான் சிறந்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரம் மகனை தவிர காங்கிரஸ் கட்சியில் வேறு யாரும் தனது சொந்த தொகுதியில் நின்று வெற்றி பெறவில்லை. சொந்த தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டுக்கூட வாங்க முடியாதவர்கள் தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்கள். தி.மு.கவிற்கு சுமையாக கே.எஸ்.அழகிரி  இருக்கிறார்.

திருமணம் செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என ராகுல் காந்தியிடம் கேட்ட போது, இன்னொரு பெண்ணை விதவையாக்க விரும்பவில்லை என ராகுல் காந்தி பதில் அளித்தார். தேர்தல் நேரத்தில் எதிர் கட்சியினர் கே.எஸ்.அழகிரியின் மோசடி புகாரை பெரிதுபடுத்துவார்கள். வரும் தேர்தல் அ.தி.மு.கவிற்கு வாழ்வா? சாவா? என்ற நிலையில் உள்ளது. எனவே அவர்களும், பா.ஜ.க வும் இதனை பெரிதுப்படுத்தி பிரச்சாரம் செய்வார்கள். எனவே அழகிரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: