நெல்லையில் தலைதூக்கும் கூலிப்படை சம்பவங்கள் - தனிப்படை நடவடிக்கையால் பிழைத்த ப்ளஸ்2 மாணவன்

நெல்லையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

மாணவனை கொலை செய்வதற்காகவே நாட்டு வெடிகுண்டுகளை  அவர்கள் தயார்செய்து களக்காடு மலைப்பகுதிகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  • Share this:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே  காதல் தகராறில் ப்ளஸ் 2 மாணவனை தீர்த்து கட்ட முயன்ற  பெண்ணின் உறவினர்கள்  மற்றும் கூலிப்படையினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் ,பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் துரை இவரது மகன் விக்னேஷ் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனான இவர் களக்காடு அருகே பொத்தையடி கிராமத்தை சேர்ந்த தன்னுடன் பள்ளியில் பயின்ற  ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும்  18 வயதுக்கு குறைந்தவர்கள் என்பதாலும் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதாலும்  இருவரின் குடும்பத்தினர்  தரப்பிலும் காதலுக்கு  கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவன் அடிக்கடி பொத்தடிக்கு வந்து சென்றதாக தெரிகிறது. இதனால் பெண்ணை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இருவரும்  சந்திப்பதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் மாணவனை அவர்களது சொந்த ஊரான பொத்தையடிக்கு  அழைத்துள்ளனர். கொலைக்கான சதித்திட்டம் தீட்டி பொத்தையடிக்கு  அழைக்கப்படுகிறோம் என்பதை அறியாமல் அவனும் பொத்தையடிக்கு தனியாக  வந்துள்ளான்.   இதுகுறித்த ரகசிய தகவல் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்பு பிரிவிற்கு கிடைத்துள்ளது. நடவடிக்கையில் இறங்கிய சிறப்பு பிரிவு குழுவினர் விக்னேசை கொலை செய்யும் நோக்கில் வந்த பெண்ணின்  உறவினர்கள் மற்றும் கூலிப்படையினர்  4 பேரை பிடித்து விசாரணை செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஏழு  அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர  ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவனை கொலை செய்வதற்காகவே நாட்டு வெடிகுண்டுகளை  அவர்கள் தயார்செய்து களக்காடு மலைப்பகுதிகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 6 நாட்டு வெடி குண்டுகளும் ஏழு அரிவாள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இவர்கள் செய்த நாட்டு வெடிகுண்டை அப்பகுதியில் பழத்தில் வைத்து ஆள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில்  வீசியுள்ளனர் அதனை மேய்ச்சலுக்கு வந்த ஆடு சாப்பிட்ட நிலையில் வெடிகுண்டு வெடித்து குடல் சிதறி ஆடு உயிர் இழந்துள்ளது.இந்த வகையில் அவர்கள் வெடிகுண்டு வெடிப்பதை அவர்கள் சோதித்து பார்த்துள்ளனர்.

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நாங்குநேரி அருகே மறுகால் குறிச்சி பகுதியில்  பழிக்கு பழியாக வெடிகுண்டு வீச்சு  ஸ்ரீவைகுண்டம் அருகே காவலர் வெடிகுண்டு வீசி கொலை என சம்பங்கள் அரங்கேறிய நிலையில் நெல்லை மாவட்டத்தில்  மீண்டும் கூலிப்படையினரை வைத்து கொலை செய்வது  வெடிகுண்டு அரிவாள் கலாச்சாரம் தலைதூக்க துவங்கியுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Ramprasath H
First published: