காவல் நிலைய பாத்ரூம்களில் கைதிகள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? ஆர்.டி.ஐ மூலம் வழக்கறிஞர் கேள்வி!

பல்வேறு குற்றச்செயல்களில் கைதானவர்கள்

கை உடைப்பு நிகழ்வுகள் குற்றத்தை குறைக்கும் என்று பலர் ஆதரவாக இருந்தாலும், இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று எதிர்க்குரலும் கேட்கிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழகத்தில் சமீப காலமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைதானவர்கள் பாத்ரூம்களில் வழுக்கி விழுந்து கையை உடைத்துக்கொள்ளும் சம்பவம் நடந்து வரும் நிலையில், நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.டி.ஐ மூலம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

  தமிழகத்தில் சமீப காலமாக குற்றச்செயல்களில் கைதாகும் நபர்கள் காவல் நிலைய பாத்ரூம்களில் வழுக்கி விழுந்து கையை உடைத்துக்கொள்வது வாடிக்கையாக உள்ளது. செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் கைதானவர்கள், பேருந்துகளில் பட்டாக்கத்தியுடன் சண்டையிட்ட கல்லூரி மாணவர்கள், நெல்லையில் உள்ள கடை ஒன்றில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் ஆகியோர் மறுநாளில் கை உடைந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

  சென்னை கல்லூரி மாணவர்கள்


  பாத்ரூம்-ல் வழுக்கி விழுந்து அவர்கள் கையை உடைத்துக்கொள்வதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், எல்லோருமே ஒரே மாதிரி விழுவது ஏன்? என்ற கேள்வி எழாமல் இல்லை. கை உடைப்பு நிகழ்வுகள் குற்றத்தை குறைக்கும் என்று பலர் ஆதரவாக இருந்தாலும், இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று எதிர்க்குரலும் கேட்கிறது.

  இந்நிலையில், நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, காவல் நிலையங்களில் உள்ள பாத்ரூம்களின் நிலை பற்றி ஆர்.டி.ஐ மூலம் காவல் துறை இயக்குநருக்கு மனு அளித்துள்ளார். அதில், அதிலிருந்து, "காவல்நிலையங்களில் உள்ள பாத்ரூம்களில் வழுக்கி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்ட காவலர்கள் கடந்த 2010-19 வரை எத்தனை பேர் என்ற விவரம் காவல்நிலையம் வாரியாக மாவட்டம் வாரியாக தரவேண்டும். காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதிகள் எத்தனை பேர் கடந்த 2010-19 வரை பாத்ரூம்-ல் வழுக்கி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளார்கள் என்ற விவரம் காவல் நிலையம் வாரியாக மாவட்டம் வாரியாக தனித்தனியே தரவேண்டும் என்று அவர் கேள்வி கேட்டுள்ளார்.

  மேலும், “தமிழ்நாட்டில் உள்ள காவல்நிலையங்களில் அமையப்பெற்றுள்ள பாத்ரூம்களில் விசாரணைக் கைதிகள் விழாமல் இருப்பதற்காகவும், காவலர்கள் விழாமல் இருப்பதற்காகவும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?, காவல்நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்கு ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் எத்தனை பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்?, காவல்நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது?” என்ற விபரமும் அவர் கேட்டுள்ளார்.

  அதோடு மட்டுமல்லாமல், “தமிழ்நாட்டில் உள்ள காவல்நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்து சென்று காவலர் சீருடையில இல்லாத நபர்களால் கை, கால்கள் முறிக்கப்படுகிறது எனில் அவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் எவ்வளவு? என்றும், காவல்நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்து வந்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்ட வகைக்கு எத்தனை காவலர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” ஆகிய கேள்விகளையும் அவர் கேட்டுள்ளார்.

  Published by:Sankar
  First published: