நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தமிழக மாணவிகள் இருவர் தற்கொலை - ஸ்டாலின் கண்டனம்

தற்கொலை செய்துகொண்ட மாணவிகள்

மோடி தலைமையில் பதவியேற்ற பாஜக அரசு, இன்னமும் தமிழகத்தில் நடைபெறும் நீட் தற்கொலைகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், திருப்பூர் மற்றும் பட்டுக்கோட்டையில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்துள்ளார். விடுமுறையில் வீட்டுக்கு கூட செல்லாமல் படித்ததால்தான் வெற்றிபெற முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த ஆண்டைவிட இந்தாண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்திருப்பதாகவும், தமிழில் பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி போதாது என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாணவி தற்கொலை

இந்நிலையில், மதிப்பெண் குறைந்ததால் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பத்தாம் வகுப்பில் 500-க்கு 461 மதிப்பெண் எடுத்திருந்த இவர், பிளஸ் டூவில் 600-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

மருத்துவக் கனவோடு நீட் தேர்வு எழுதிய இவர், நேற்று வெளியான முடிவுகளை பார்த்தபோது 68 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பட்டுக்கோட்டை மாணவி தற்கொலை

இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா என்ற மாணவியும், நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்று மாணவிகள் மன அழுத்தத்தில் இருந்தால், சினேகா தற்கொலை தடுப்பு மையத்தை 044 2464 0050 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மாணவிகளின் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர்களது மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மோடி தலைமையில் பதவியேற்ற பாஜக அரசு, இன்னமும் தமிழகத்தில் நடைபெறும் நீட் தற்கொலைகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதேபோல்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசனும், இரங்கல் தெரிவித்து இருப்பதோடு, உயிரிழந்த மாணவிகள் குடும்பத்துக்கு தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Also see... உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா... சாதனை படைத்த

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: