நீட் தேர்வில் வெற்றிபெற்றும் மருத்துவக் கல்வியில் சேர முடியாமல் தவிக்கும் பட்டியலின மாணவி - முதல்வருக்கு கல்வியாளர்கள் கோரிக்கை

நீட் தேர்வில் வெற்றிபெற்றும் மருத்துவக் கல்வியில் சேர முடியாமல் தவிக்கும் பட்டியலின மாணவி - முதல்வருக்கு கல்வியாளர்கள் கோரிக்கை

மாணவி சந்திரலேகா, பேராசிரியர் பிரபா கல்விமணி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தாய் தமிழ்ப் பள்ளியில் பயின்ற மாணவிக்கு மருத்துவக் கல்வி இடம் தருமாறு கல்வியாளர்கள் கோரியுள்ளனர்.

 • Share this:
  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தாய் தமிழ்ப் பள்ளி சுயநிதிப் பள்ளியாக இயங்கிவருகிறது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை இலவசமாக கல்வி பயின்ற மாணவி சந்திரலேகா, அருகிலுள்ள முருங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பயின்றுள்ளார். 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளிலும் மாணவி சந்திரலேகா பள்ளியளவில் முதல் மாணவியாகவும் தேர்ச்சிபெற்றார்.

  பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி சந்திரலேகா, 12ம் வகுப்பில் 471 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த அவர், 155 மதிப்பெண் பெற்று திண்டிவனம் அளவில் இரண்டாவது இடத்தையும் மாவட்ட அளவில் 52வது இடத்தையும், மாநில அளவில் 271வது இடத்தையும் பெற்றார்.

  நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 6வது வகுப்பிலிருந்து அரசுப் பள்ளியில் கல்வி பயின்றிருக்க வேண்டும் அல்லது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சுயநிதி பள்ளியில் பயின்றிருக்க வேண்டும். இந்நிலையில், சுயநிதி பள்ளியில் படித்த மாணவி சந்திரலேகாவுக்கு மருத்துவ இடம் மறுக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து 25 சதவீத சலுகை பெற்று இயங்கும் சுயநிதி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும் என்ற விதி உள்ளதால் அதனை திருத்தி இந்த மாணவிக்கு மருத்துவ இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் பிரபா கல்விமணி, நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட பிறகு அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்துவிட்டது. கடந்த 2018-19 ஆண்டுகளில் 5 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். திண்டிவனம் தாய் தமிழ்ப் பள்ளியில் 100 விழுக்காடு இலவசமாக கல்வி வழங்கப்படுகிறது. மாணவி சந்திரலேகாவுக்கு மருத்துவ இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியின் சார்பில் முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறோம் என்றார்.

  தமிழகத்தில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 70 சதவீத மாணவர்கள் கல்வி பயில்வதாகக் கூறிய அவர், இவர்களுக்கு ஒரு விழுக்காடு இடம்கூட மருத்துவக் கல்வியில் கிடைப்பதில்லை என்றும் தனியார் மற்றும் வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்கள்தான் 98 சதவீத மருத்துவ இடங்களை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு குறைந்தபடம் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் கூறினார்.
  Published by:Rizwan
  First published: