நீட் தேர்வு முறைகேடு: ஆள்மாறாட்டம் செய்த 10 பேரைக் கைது செய்ய முடியாமல் திணறும் சி.பி.சி.ஐ.டி

நீட் தேர்வு முறைகேடு: ஆள்மாறாட்டம் செய்த 10 பேரைக் கைது செய்ய முடியாமல் திணறும் சி.பி.சி.ஐ.டி

நீட் முறைகேடு மாணவர்கள்

நீட் தேர்வு ஒருபுறம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் சிபிசிஐடி திணறி வருகிறது.

 • Share this:
  தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வெழுதி மருத்துவக் கல்லூரிகளில் பலர் சேர்ந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்த மாணவர் உதித் சூர்யாவும், அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசனும்தான் முதன்முதலில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் தொடங்கிய விசாரணை நீண்டு கொண்டே போன நிலையில் இதுவரை 5 மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர் 6 பேர் மற்றும் ஒரு இடைத் தரகர் என 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இவர்கள் அனைவருக்குமே நீதிமன்றம் ஜாமின் வழங்கிவிட்டது. விசாரணை விறுவிறுப்படைந்து வந்த நிலையில், வழக்கில் சிக்கியவர்களுக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் கடந்த 7 மாதங்களுக்கு முன் வெளியிட்டனர். அவர்களின் பெயர், முகவரி குறித்து விவரம் தெரிந்தால் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கைபேசி எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டது.

  முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட ரசீத் என்பவரையும் சிபிசிஐடி போலிஸ் தேடி வந்தது. ஆனால் இன்று வரை அந்த 10 பேரையும், முக்கிய இடைத்தரகர்களையும் கைது செய்ய முடியவில்லை. குற்றவாளிகள் வெளிமாநிலங்களில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

  கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பிற மாநிலங்களுக்கு சென்று அவர்களை கைது செய்ய முடியவில்லை என்கிறது சிபிசிஐடி தரப்பு. முக்கியக் குற்றவாளிகள் சிக்காத நிலையில் ஆள்மாறாட்ட வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படாமல் உள்ளது.
  Published by:Karthick S
  First published: