நீட் தேர்வு விலக்கு பெறும் விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும்,
எடப்பாடி பழனிசாமியும் மக்களை ஏமாற்றுவதாக டிடிவி தினகரன்
குற்றம்சாட்டியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
"நீட் தேர்வு விலக்கு பெறும் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி மக்களை ஏமாற்றுகின்றனர். இந்த விவகாரத்தில் மாறி, மாறி குற்றம்சாட்டிக் கொள்வதன் மூலம் திமுகவும், பழனிசாமியும் இப்பிரச்சனையில் தமிழக மாணவர்களுக்குச் செய்த துரோகத்தை மறைத்து விட முடியாது. சட்டப்பேரவையில் 2017-ம் ஆண்டு நீட் விலக்கு கேட்டு நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களிடமிருந்து மறைத்து நாடகமாடியவர் எடப்பாடி பழனிசாமி.
இதையும் படிங்க -
தமிழ்நாட்டில் சினிமா தியேட்டர்கள், உணவகங்கள், சுற்றுலா தலங்களில் 100% அனுமதி?
அதன் பிறகும் நீட் தேர்வுக்கு விலக்கு பெற எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் வேடிக்கை பார்த்ததும் இதே பழனிசாமிதான். இவரது நாடகத்திற்கு கொஞ்சமும் சளைக்காமல், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வைக் கொண்டுவந்த திமுகவும் மக்களை ஏமாற்றி வருகிறது.
நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்துவிடுவோம் என்று பொய் வாக்குறுதியைத் தந்தவர்கள், தற்போது 'சட்டமன்றத் தீர்மானம்', 'வலியுறுத்துவோம்' என்று கூறி முடிவில்லாத ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். ஆனால், பழனிசாமியோ, ஸ்டாலினோ நீட் விலக்கு விவகாரத்தில் எதார்த்தம் என்ன என்பது பற்றி மக்களிடம் உண்மையைச் சொல்வதற்குத் தயாராக இல்லை.
தேர்தல் நேரத்தில் ஏமாற்றி வாக்குகளை வாங்குவதற்கான ஓர் ஆயுதமாக நீட் விலக்கை கையில் வைத்துக்கொண்டு பேசுகிறார்கள். அனைத்து தரப்பினரும் இப்பிரச்சனையில் ஒன்றுபட்டு, தமிழ்நாட்டின் சூழலை மத்திய அரசிடம் புரிய வைக்க வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க -
27 அமாவாசை வரை தான் இந்த ஆட்சி.. மீண்டும் சட்டமன்ற தேர்தல் வரும், ஆட்சி மாறும்.. பகீர் கிளப்பும் எடப்பாடி!!
இல்லையென்றால், 'நீட் தேர்வுக்கு விலக்கு பெற வாய்ப்பில்லை' என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டு, அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதில் கவனம் செலுத்தவேண்டும்.
தமிழகத்தில் கூடுதல் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குதல், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இப்போதுள்ள இட ஒதுக்கீடை இருமடங்காக உயர்த்துதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட ஆக்கபூர்வமான செயல்பாடுகளை தமிழக அரசு முன்னெடுத்திடவேண்டும்.
இது மட்டுமின்றி, ஒத்திசைவு பட்டியலில் (Concurrent List) உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதற்கு அத்தனை முனைகளிலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்"
இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.