கடந்த ஆண்டை விட குறைந்த நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: போக்குவரத்து வசதி இல்லாதது காரணமா?

கடந்த ஆண்டை விட குறைந்த நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: போக்குவரத்து வசதி இல்லாதது காரணமா?

மாதிரிப் படம்

கொரோனா அச்சத்தாலும், போதிய பேருந்து வசதி இல்லாததாலும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது வெளியாகியுள்ள நீட் தேர்வு முடிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

 • Share this:
  கொரோனா காலத்தில் நீட் தேர்வுகளை நடத்தியதால், விருப்பம் அதிகரித்தும் தேர்வை எழுத முடியாதவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருப்பது நீட் புள்ளிவிபரங்கள் வழியாக தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 15,97,435 ஆகும். இது கடந்த ஆண்டு வந்த 15,19,375 விண்ணப்பங்களை விட 5.14% அதிகம் ஆகும். இதில் மாற்றுப்பாலினத்தவர் ஒருவர் உட்பட 56.4% (7,71,500) தேர்ச்சியடைந்துள்ளார்கள். ஆண்கள் 3,43,556. பெண்கள் 4,27,943.

  இது கடந்த ஆண்டு தேர்ச்சியை விட 25,542 பேர் குறைவாகும். கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 14.1 லட்சம் பேர்களில் 7,97,042 தேர்வானார்கள். ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டில் 92.85% (14,10,755) பேர் தேர்வை எழுதினார்கள். ஆனால் இந்த ஆண்டில் 85.57% (13,66,945) பேர் மட்டுமே தேர்வை எழுத முடிந்துள்ளது.

  இந்தியாவில் 2.3 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தும் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதியவர்களில் 7,16,586 (44.86%) பேர் ஆண்கள், 8,80,843 (55.14%) பேர் பெண்கள் ஆவர். கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் தேவைக்காக, அறைகள் இரு மடங்கிற்கு மேல் அதிகப்படுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் பொதுப் போக்குவரத்து இல்லாததால் மாணவர்கள் தேர்வு எழுத வர முடியவில்லை.

  பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டு பிரிவில் 93,915 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதில் 85,799 தேர்வு எழுதியுள்ளனர். 57,444 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற இட ஒதுக்கீட்டு பிரிவுகளில் தேர்ச்சியடைந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. OBC சுமார் 15,000, SC 1,000, ST 2,000 என்ற அளவில் தேர்ச்சி குறைந்துள்ளது. பொது பிரிவில் தேர்ச்சி கடந்த ஆண்டை விட சுமார் 65,000 குறைந்துள்ளது. EWS இட ஒதுக்கீடு இந்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  நீட் தேர்வை தமிழ் வழியில் எழுத விண்ணப்பம் செய்தவர்கள் எண்ணிக்கை 17 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் எண்ணிக்கை 1,017 ஆகும். இந்த ஆண்டு 17,101 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். தேர்வை எழுத முடிந்தவர்கள், தேர்ச்சியடைந்தோர் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகவில்லை.

  நீட் தேர்வில் தேர்ச்சியானவர்களில் 2,137 மாற்றுத் திறனுடையோர் ஆவர். தமிழகத்தில் இந்த ஆண்டு 57,215 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சியடைந்தோர் எண்ணிக்கையை விட 2,570 குறைவாகும். கடந்த ஆண்டு 59,785 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்திருந்தார்கள்.

  இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1,21,676 விண்ணப்பங்கள் வந்தன. அதில் தேர்வு எழுதியவர்கள் 99,610 மட்டுமே ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்வெழுதியோர் எண்ணிக்கை 23,468 குறைவாகும்.

  அதே போல, முதல் மதிப்பெண் எடுத்த 50 பேரில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே தமிழகத்தில் இடம் பெற்றுள்ளார். அதிக மதிப்பெண் எடுத்த 20 பெண்களில் 2 பேர் தமிழகத்தில் தேர்வு எழுதியவர்கள்.


  நீட் தேர்வில் இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் 88,889 பேர் திரிபுரா மாநிலத்தில் தேர்வாகியிருப்பதாக சி.பி.எஸ்.இ அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் அங்கு தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கையே 3,536 மட்டும்தான். இதே போல உத்திர பிரதேச மாநிலத்தில் 1.56 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 7323 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் 60.79% என குறிப்பிடப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: