உதித் சூர்யா வருகைப் பதிவேட்டில் திருத்தம் - தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கும் தொடர்பு?

உதித் சூர்யா வருகைப் பதிவேட்டில் திருத்தம் - தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கும் தொடர்பு?

வருகை பதிவேட்டில் திருத்தம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யாவின் வருகை பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டுள்ள, ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

  நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக கைதான மாணவர் உதித் சூர்யா அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  திருப்பதி அருகே கைது செய்யப்பட்ட இருவரிடமும் நேற்று தேனியில் வைத்து விசாரணை நடைபெற்றது. அப்போது நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவும், வெங்கடேசனும் ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் அளித்ததாக கூறப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த தரகர் மூலம் மும்பையைச் சேர்ந்த ஒருவரின் உதவியோடு ஆள் மாறாட்டம் செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

  அதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு இருவரையும் அழைத்துச் சென்ற சிபிசிஐடி காவலர்கள் அங்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். பின்பு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் தேனி மாவட்டச் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

  முன்னதாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்பு கல்லூரிக்கு சென்று முதல்வரின் அலுவலகம், மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலகம் ஆகியவற்றில் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர்.

  இந்த நிலையில், திருப்பதியில் தலைமறைவாக இருக்கும் போது விஷ ஊசி போட்டு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதாக விசாரணையில் வெங்கடேசன், போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர், வெங்கடேசன் உடன் ஒன்றாக பணி புரிந்தவர் என்பதால், அவர் உதவியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  உதித் சூர்யாவின் கல்லூரி வருகை பதிவேட்டில் திருத்தம்  செய்யப்பட்டுள்ளதை சி.பி.சி.ஐ.டி போலீசார் கண்டறிந்துள்ளனர். இதனால், கல்லூரி நிர்வாகத்தில் அவருக்கு யாரேனும் உதவியிருக்கலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

  ஆவணங்கள் கிடைத்துள்ள நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விரைவில், பல முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  இது ஒருபுறம் இருக்க, உதித் சூர்யா குடும்பத்திற்கு உதவி செய்த இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கேரளாவைச் சேர்ந்த தரகர் ஜார்ஜ் ஜேசப் என்பவர் திருவனந்தபுரத்தில் சிக்கினார்.

  மும்பையில் தேர்வு மையத்தில் உதித் சூர்யாவுக்கு பதில் வேறு ஒரு மாணவரை அனுப்பியதாக அவர் விசாரணையில் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் 20 லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  Published by:Sankar
  First published: