”அது செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படம்” - நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யா முன் ஜாமின் மனு

”அது செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படம்” - நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யா முன் ஜாமின் மனு

மாணவர் உதித் சூர்யாவும் தேர்வெழுதிய மாணவர் புகைப்படமும்

நீட் விண்ணப்ப படிவத்திலும், கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்திலும் உதித்சூர்யாவிற்கு பதில் தேர்வு எழுதியவரின் புகைப்படம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில், மருத்துவ கல்லூரி மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர் உதித் சூர்யா முன் ஜாமின் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ள வெங்கடேசன் என்பவரின் மகன் உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஆள் மாறாட்டம் எப்படி நடந்தது? என்பது தொடர்பான ஆவணங்கள் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளன.

  சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்விற்காக விண்ணப்பித்தார். தேர்வு எழுதும் மையத்தை தமிழகத்தில் தேர்வு செய்யாமல், மகாராஷ்டிராவில் தேர்வு செய்தார் உதித்சூர்யா.

  தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கல்லூரி முதல்வருக்கு மின்னஞ்சல் வந்திருக்கிறது. மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவின் பேரில் குழு அமைத்து விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் உதித்சூர்யா கல்லூரியில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்தார்.

  உதித்சூர்யா தொடர்பான சான்றிதழ்களை சரிபார்த்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. நீட் விண்ணப்ப படிவத்தில் உதித்சூர்யாவிற்கு பதிலாக தேர்வு எழுதிய மற்றொருவரின் புகைப்படம் இருந்தது.

  அதன்படி, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படமும், நீட் விண்ணப்ப படிவத்தின் புகைப்படமும் வேறு வேறாக இருந்தன. உதித்சூர்யாவிற்கு பதிலாக நீட் தேர்வு எழுதியவரே, கல்லூரி சேர்க்கையின்போதும் வந்திருப்பது விசாரணைக் குழு விசாரணையில் தெரியவந்தது.

  நீட் விண்ணப்ப படிவத்திலும், கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்திலும் உதித்சூர்யாவிற்கு பதில் தேர்வு எழுதியவரின் புகைப்படம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

  15 நாள் விடுப்புக்கு பிறகு வகுப்புகளில் கலந்துக்கொண்ட உதித்சூர்யா, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பின் தலைமறைவாகி இருக்கிறார். கல்லூரி விடுதி சேர்க்கை படிவத்திற்கு உதித்சூர்யா தனது புகைப்படத்தை கொடுத்திருந்ததும் தெரியவந்தது.

  தண்டையார்பேட்டையில் உள்ள உதித்சூர்யாவின் வீடு பூட்டியிருப்பதால், அக்கம் பக்கத்தினரிடம் தேனி போலீசார் விசாரணை செய்தனர். ஸ்டான்லி மருத்துவமனை சென்ற போலீசார், உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் குறித்து மருத்துவமனை ஆர்.எம்.ஓ. ரமேஷிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் 2 நாள் மருத்துவ விடுப்பில் சென்றதாக கூறப்பட்டது.

  இதனிடையே, ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றம் சாட்டப்படும் மாணவர் உதித் சூர்யா, முன் ஜாமின் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

  அதில், கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில், தான் 382 மதிப்பெண் பெற்று, இந்திய அளவில் 6, 704-வது இடத்தை பிடித்ததாக கூறியுள்ளார். சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து திருப்தி அடைந்த நிலையிலேயே தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுக்கப்பட்டதாகவும், தீவிர மன நலப் பிரச்னை காரணமாகவே, படிப்பை நிறுத்த முடிவு எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

  இந்த நிலையில், செப்டம்பர் 17-ம் தேதி ஆள்மாறாட்டம் செய்ததாக செய்தி வெளியாகியிருப்பதாகவும், வெளியிடப்பட்ட 2 புகைப்படங்களில் ஒன்று செல்போனில் எடுக்கப்பட்டது, மற்றொன்று ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது என்பதால், வேறுபாடு இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

  எனவே, தேனி கண்டமனூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கி முன் ஜாமின் வழங்க வேண்டும் என உதித் சூர்யா மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

  Published by:Sankar
  First published: