நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்பேரவையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்பேரவையில் அவசரத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் (படம்: Twitter)

சட்டமன்றத்தைக் கூட்டி நீட் தேர்வுக்கு எதிராக அவசரத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் திமுகவின் எதிர்ப்பு இந்திக்கு அல்ல, இந்தி ஆதிக்கத்திற்குத்தான் என்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • Share this:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் அலுவலகத்தில், திமுகவில் சேர்க்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் 30 பேருக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுப்பினர் அட்டையை வழங்கி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு உறுப்பினர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இளைஞர் அணி பொறுப்பை ஏற்றவுடன் 30 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பயணித்தோம். அதன் முதல் நிகழ்ச்சி மறைந்த ஜே.அன்பழகன் அவர்களின் தொகுதியில்தான் நடக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதன் காரணமாக முதல் உறுப்பினர் சேர்க்கையை அங்கு நடத்தினோம் என்று கூறினார். மேலும், அவரையும் கொரோனோவால் நாம் இழந்துவிட்டோம் என்றும், போர்க்களத்தில் கள வீரனை இழந்து நிற்கிறோம். ஜே.அன்பழகன் அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை அவரின் மகன் சிற்றரசு நிரப்புவார் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

கொரோனோ களத்தில் முன்னின்று செயல்பட்டது திமுக தான் என்று கூறிய அவர், தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்; முதல்வர் நாற்காலியில் அமரப் போவது தலைவர் ஸ்டாலின் தான் எனக் கூறிய உதயநிதி, ஸ்டாலின் முதல்வர் ஆவதைத் தடுப்பதற்கு சில எதிரிகள் தினமும் ஒரு தவறான செயல்களைச் செய்து வருகின்றனர் என்றும் கூறினார்.

திராவிட இயக்கத் தலைவர்களாக அண்ணா, கலைஞர் போன்றோரின் சாதனைகளைச் சொல்லத் தவறிவிட்டோமோ என்ற குறை இருக்கிறது என வேதனை தெரிவித்த உதயநிதி, அந்தக் குறையை நிவர்த்தி செய்ய நமது கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி, நீட் தேர்வை தொடக்கம் முதல் திமுக எதிர்த்து வருகிறது. கடந்த ஆண்டே பல குளறுபடிகள் அதில் நிகழ்ந்த நிலையில், தற்போது கொரோனா காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்கு சட்டமன்றத்தைக் கூட்டி அவசரத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும், நீட் விவகாரத்தில் ஸ்டாலின் அறிவித்தால் போராட்டம் நடத்தத் தயாராக உள்ளோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் தலைவராக 3ம் ஆண்டு பயணம் ஸ்டாலினுக்கு சவால்தான் என்றும், தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் இந்தச் சவாலை எதிர்கொள்ள ஸ்டாலின் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், மதத்தை வைத்து திமுக அரசியல் செய்யவில்லை; அதனை யார் செய்கிறார்கள் என அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்த உதயநிதி, திமுகவின் எதிர்ப்பு இந்திக்கு அல்ல, இந்தி ஆதிக்கத்திற்கும், இந்தி திணிப்பிற்கும் தான் எதிர்ப்பு என்று தெரிவித்தார்.
Published by:Rizwan
First published: