ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காத்திருக்கும் 6900 பேர்... உடல் உறுப்பு தானம் செய்ய தமிழக மக்களுக்கு வேண்டுகோள்...

காத்திருக்கும் 6900 பேர்... உடல் உறுப்பு தானம் செய்ய தமிழக மக்களுக்கு வேண்டுகோள்...

உடல் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம்

கொரோனா காலத்தில் தமிழகத்தில் குறைந்த உடல் உறுப்பு தானம் தற்போது மீண்டும் மெல்ல அதிகரித்துள்ளது. மூளைசாவு அடைந்த ஒரு நபர் இருதயம், நுரையீரல், கண்கள் உள்ளிட்ட பல உறுப்புகளை தானமாக அளித்து எட்டு பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடந்த 2010ம் ஆண்டில் இருந்து நவம்பர் 27ம் தேதி உடல் உறுப்பு தான தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  உடல் உறுப்பு தானத்தை பொறுத்தவரை தமிழகத்தில் தற்போது  பல்வேறு உறுப்புகளுக்காக 6901 பேர் காத்திருக்கின்றனர்.

இதில் 6405 பேர் சிறுநீரகத்துக்காகவும் 404 பேர் கல்லீரலுக்காகவும் 31 பேர் இருதயத்துக்காகவும் 28 பேர் இரண்டு நுரையீரல்களுக்காகவும்  எட்டுபேர் இருதயம் மற்றும் இரண்டு நுரையீரல்களுக்காகவும் 23 பேர் கைகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்.

கொரோனா காலத்தில் குறைந்த உடல் உறுப்பு தானம் தற்போது மீண்டும் மெல்ல அதிகரித்திருப்பதாகவும் மக்கள் அதிகம் முன் வந்து உறுப்பு தானம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உறுப்பு தான அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அமலோர் பாவநாதன் கூறுகிறார். தானமாக அளிக்கப்படும் உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே செல்லும் என்றும் உறுப்பு தானத்தில் முன்னிலையில் உள்ள தமிழகத்தில் நம்பிக்கையுடன் மக்கள் முன் வந்து உறுப்பு தானம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

தமிழகத்தில் உடல் உறுப்பு தான திட்டம் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 1447 பேர் தங்கள் உறுப்புகளை பிறருக்கு தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையில் ஈடுபட்டுள்ளனர்.  மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து 654 இருதயம், 629 நுரையீரல் பெறப்பட்டு மண்ணுக்கு செல்லாமல் மனிதர்களுக்கு தானமாக வழங்கப்பட்டு மறுவாழ்வு பெற்றிருக்கின்றன.

இதையும் படிங்க: Omicron: கொடிய ஓமைக்ரான் கொரோனா இந்தியாவில் பரவாமல் தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அதே போன்று 2585 சிறுநீரகம், 1351 கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு கைகள், ஒருவருக்கு வயிறு உட்பட மொத்தம் 5238 பெரிய உறுப்புகள் இது வரை தானமாக வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை தவிர இருதய வால்வு, கண்கள், தோல், எலும்பு, ரத்த நாளங்கள் உட்பட 3401 சிறிய உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.உயிருடன் இருக்கும் நபர் தனது ஒரு சிறுநீரகத்தையும் கல்லீரலின் ஒரு பகுதியையும் பிறருக்கு வாழும் போதே தானமாக அளிக்க முடியும்.

மேலும் படிங்க: வடகிழக்கு பருவமழையால் சென்னையில் இயல்பை விட 77% மழை!

மூளைசாவு அடைந்த ஒரு நபர் இருதயம், நுரையீரல், கண்கள் உள்ளிட்ட பல உறுப்புகளை தானமாக அளித்து எட்டு பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். இந்திய உடல் உறுப்பு தான் விழிப்புணர்வு நாள் நவம்பர் 27ம் தேதி அனுசரிக்கப்படும் நிலையில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் எனபது அனைவரது எதிர்ப்பார்ப்பாகும்.

First published:

Tags: Organ donation, Tamilnadu