தேசிய மருத்துவர்கள் தினம்: கொரோனா கோரத்திலிருந்து ஓய்வின்றி உலகைக் காக்கும் சூப்பர்மேன்களை வாழ்த்துவோம்

கோப்புப் படம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அளப்பறிய பணியாற்றி பல உயிர்களை காப்பாற்றிய, மருத்துவர்களின் உன்னத பணியை தேசிய மருத்துவர்கள் தினத்தில் நினைவு கூறுவோம்.

  • Share this:
    கொரோனா பரவல் தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக இடைவிடாமல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும், கொரோனா தொற்றாளர்களுக்கு சலிக்காமல் சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள். கொரோனா வார்டுகளில் பணிபுரிவதால் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்திக் கொள்ளும் மருத்துவர்கள், தங்கள் குடும்பங்களை கூட பல மாதங்கள் பார்க்காமல் இருந்து வருகின்றனர்.

    நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது தொற்று ஏற்பட்டு பல மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலையில் தமிழ்நாட்டில் 51 மருத்துவர்கள் இறந்துள்ளதாக இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த வந்த மூத்த மருத்துவர் சைமன் கடந்த ஆண்டு தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணி புரிந்த, பல மருத்துவர்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே, அவர்களின் பணிகளை புரிந்து கொண்டு பொதுமக்கள், கொரோனாவை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் என, உயிரிழந்த மருத்துவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடாவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் மருத்துவர் அருண் பிரசாத். மலை, ஆறு கடந்து நோயாளிகளை மருத்துவமனைக்கு கூட்டி வந்து சிகிச்சை அளிப்பது மற்றும் தடுப்பூசி செலுத்துவது போன்ற சேவைகளை செய்து வருகிறார். இதேபோன்று, பல மருத்துவர்களும் பொதுமக்களின் உயிரை காப்பாற்றும் பணியில், தங்களை ஆர்வமுடன் முன்னிலைபடுத்தி வருகின்றனர்.

    கொரோனா பெருந்தொற்றின் பெரும்பாலான சுமையை ஏற்றுக் கொண்டவை அரசு மருத்துவமனைகளே ஆகும். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களும் செவிலியர்களும் சிகிச்சை அளித்தது மட்டுமல்லாமல், தன் பயத்தையும் போக்கி தைரியம் அளித்ததாக அங்கு சிகிச்சை பெற்ற மகாலட்சுமி என்பவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உயிர்பறிக்கும் நோயாக அறியப்படும் கொரோனாவுக்கு அஞ்சாமல், இரவு பகலென சேவை செய்து பல உயிர்களை காப்பாற்றும் மருத்துவர்களுக்கு, தேசிய மருத்துவர்கள் தினத்தில் அனைவர் சார்பாகவும் பெருமகிழ்வுடன் வாழ்த்துவோம்.
    Published by:Karthick S
    First published: