சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் இந்து சமய அறநிலைத்துறை ஆட்சிக்குழு ஆய்விற்கு சரியான முறையில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை இது தொடர்பாக அறிக்கை தயார் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட வருவாய் ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரண்டாவது நாளாக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று காலை 11 மணி அளவில் ஆய்வை மேற்கொள்வதற்காக வருகை புரிந்தனர். தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய தீட்சிதர்கள் இரண்டாவது நாளாக கோவில் கணக்கு வழக்கை காண்பிக்க மறுத்தனர்.
அதைத்தொடர்ந்து கோவில் வெளியே அமர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மதிய உணவிற்கு சென்று மாலை 4.30 மணி அளவில் மீண்டும் ஆய்வு செய்வதற்காக வருகை புரிந்தனர். இன்றுடன் ஆய்வு முடியும் நிலையில் மாவட்ட வருவாய் ஆட்சியர் சுகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
ஆனையர் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழு சபாநாயகர் கோவிலை கடந்த இரண்டு நாட்களாக பார்வையிட்டதாகவும்.
உரிய ஆவணங்கள் கொடுக்கச் சொல்லி கடந்த 26ம் தேதி ஒரு நோட்டீஸ் அனுப்பி இருந்தோம் அந்த ஆவணங்களை தீட்சிதர்கள் சரியான முறையில் ஒப்படைக்கவில்லை, ஒத்துழைப்பும் எங்களுக்கு அளிக்கவில்லை.
இது தொடர்பான அறிக்கை நாங்கள் தயார் செய்து ஆணையருக்கு சமர்ப்பிக்கவுள்ளோம், அதனைத் தொடர்ந்துஆணையரின் உத்தரவுப்படி சட்டப்படியான மேல் நடவடிக்கை தொடரும். கோவில் சொத்துக்கள் தொடர்பாக தனி வட்டாட்சியரிடம் ஆவணங்களை பெற்றுள்ளோம். அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தயார்செய்யும் அறிக்கையில் குறிப்பிட்டு அனுப்பி வைப்போம்.
தீட்சிதர்கள் தரப்பில் நாங்கள் சட்டப்பூர்வமான குழு இல்லை என்று கூறுகிறார்கள். அது தவறான கருத்து இந்த கோவில் ஒரு பொது சொத்து. இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை சட்டப்படி கோவிலை ஆய்வு செய்வதற்கும், ஆவணங்களை ஆய்வு செய்வதற்கும் சட்டப்படி பராமரிக்கின்றனறா என்று பார்ப்பதற்கும் துறை அலுவலருக்கு உரிமை உண்டு. கடந்த இரண்டு நாட்களாக கோவில் செயலாளர் இல்லை என கூறி ஆவணங்களை தர மறுத்துள்ளனர். மேலும் முறையான ஒத்துழைப்பும் எங்களுக்கு கொடுக்கவில்லை எனவும் ஆய்வு இன்றுடன் முடிந்ததாக தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.