ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாதி சான்றிதழ் கேட்டு தீக்குளித்தவர் உயிரிழப்பு..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாதி சான்றிதழ் கேட்டு தீக்குளித்தவர் உயிரிழப்பு..!

நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சி

நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சி

தீக்குளித்த வேல்முருகனுக்கு 95 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயத் தடுப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  ஜாதி சான்றிதழ் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று தீக்குளித்த மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தினுள் சட்ட உதவி மையம் இயங்கி வருகிறது. இந்த சட்ட உதவி மையம் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2:30 மணி அளவில் வந்த நபர் ஒருவர் தனக்கு ஜாதி சான்றிதழ் வேண்டுமென கேட்டுள்ளார். சிறிது நேரத்தில் அந்த நபர் கையில் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி நீதிமன்ற வளாகத்திலேயே தீக்குளித்தார்.

  உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அந்த நபர் கூச்சலிட்டு ஓடியுள்ளார். இதனைப் பார்த்து நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  பின்னர் நீதிமன்றவளாக பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தினகரன் மற்றும் அங்கு இருந்த வழக்கறிஞர்கள் போர்வையால் தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அந்த நபரை அனுப்பி வைத்தனர். முன்னதாக, தீக்குளித்த நபர் "தனக்கும், தனது சமூகத்தினருக்கும் தமிழகம் முழுவதும் ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை" என பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ALSO READ | நரபலி கொடுத்த உடலை சாப்பிட்ட தம்பதி.. கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

  இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், தீக்குளித்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்து உள்ள சேர்மாதூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(45) என்பது தெரியவந்தது. மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தனக்கு ஜாதி சான்றிதழ் வழங்குமாறு பலமுறை அரசு அலுவலகங்களில் கேட்டுள்ளார். இந்த நிலையில் தனக்கு ஜாதி சான்றிதழ் வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையத்திற்கு வந்ததும், பின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததும் தெரியவந்தது.

  தீக்குளித்த வேல்முருகனுக்கு 95 சதவீத தீக்காயங்களுடன்ன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயத் தடுப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். மேலும், தீக்குளித்த வேல்முருகனை காப்பாற்றுவதற்காக தீயை அணைக்க போராடிய உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தினகரனுக்கு இடது கையில் தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து எக்ஸ்பிளனேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai High court, Crime News