தமிழக அரசியல் சூழலில் முக்கிய பேச்சாளராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். தி.மு.கவிலிருந்து வைகோ பிரிந்தபோது அவருடன் சென்றவர் நாஞ்சில் சம்பத். வைகோவின் ம.தி.மு.கவில் மிகமுக்கியமான பேச்சாளராக நீண்ட காலமாக இருந்துவந்த அவர், மேடைகளில் கருணாநிதி,
ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துபேசியுள்ளார். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ம் ஆண்டு ம.தி.மு.கவிலிருந்து விலகினார்.
அதன்பின்பு, ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்து கொண்டார். அ.தி.மு.கவில் அவருக்கு கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. நாஞ்சில் சம்பத்தில் பேச்சுகளால் கவர்ந்த ஜெயலலிதா, சம்பத்துக்கு இன்னோவா காரை பரிசளித்தார் அந்தச் சம்பவம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. அதைத் தொடர்ந்து, நெட்டிசன்களால் கவனிக்கப்படும் நபராகவே நாஞ்சில் சம்பத் இருந்துவருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிளவுபட்ட போது டி.டி.வி.தினகரனுடன் இணைந்து பயணித்தார்.
பின்னர், அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து வெளியேறி அரசியலிலிருந்து ஒதுங்கினார். தற்போது எந்தக் கட்சியிலும் இல்லாவிட்டாலும் நடைபெற்ற முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து தொலைக்காட்சி விவகாரத்திலும் தி.மு.கவுக்கு ஆதரவாகப் பேசிவருகிறார். இந்தநிலையில், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘Y- பிரிவு பாதுகாப்பில் இருப்பவர், என் உயிரெடுக்க உத்தரவிட்டிருப்பதாக ஊடக நண்பர் என்னிடம் சொன்னார்.! இதை உலகிற்கு சொல்கிறேன்’ என்று பதிவிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறை இரண்டையும் டேக் செய்துள்ளார். அவருடைய ட்வீட் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.