நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து சுயமரியாதை திருமணம் கொண்டுள்ளார். மறுவீட்டுக்கு சென்ற இந்த தம்பதிக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்து அசத்தினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த தரணி என்பவர், ஸ்வீடன் நாட்டில் டெஸ்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். ஓய்வு நேரத்தில் டாக்ஹோம் பகுதியில் கூடைப்பந்து விளையாடச் சென்றபோது, மரினா சூசேன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மலர்ந்ததுள்ளது.
இதையடுத்து, திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த இவர்கள், இரு வீட்டாரின் சம்மதத்தைப் பெற்றுள்ளனர். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தரணி, அடிக்கடி தந்தை பெரியார் பற்றி மரினாவிடம் தெரிவித்து வந்துள்ளார்.
பின்னர், தனது சொந்த ஊரான சாணார்பாளையத்தில் கடந்த 7ஆம் தேதி மணமக்கள் இருவரும், இருவீட்டார் முன்னிலையில் கிறிஸ்துவ முறைப்படியும், இந்து மத வழக்கப்படியும் திருமணம் செய்து கொண்டனர். எனினும், தரணி சுயமரியாதைக்காரர் என்பதால் எந்தவித சடங்குகளும் இல்லாமல் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், திருமணம் முடிந்து இன்று மறுவீட்டுக்கு வந்த மணமக்கள் இருவருக்கும் உறவினர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர்களுக்கு விருந்து பரிமாறி மகிழ்ந்தனர்.
மணமகள் மரியா, ”தரணி குடும்பத்தினர் எனக்கு நல்ல வரவேற்பு அளித்தனர். அவர்களின் நடவடிக்கையால் எனது உள்ளம் மகிழ்ந்தது. நாடு, கலாச்சாரம் புதிதாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது, இது எங்கள் வீடு போல் உள்ளது” என்று கூறுகிறார்.
மறுவீட்டு விருந்தில் பங்கேற்ற மரினாவின் சகோதரர் மார்க் டோபியாஸ், தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை கண்டு மிகவும் பெருமிதம் அடைவதாக தெரிவித்தார்.
”இதுபோன்ற திருமண நிகழ்ச்சியில் நான் வேறெங்கும் கண்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை. இது புது மாதியாக உள்ளது. தமிழர்களின் விருந்தோம்பலை போன்று உலகில் வேறு எங்கும் கண்டதில்லை” என்கிறார் மணமகளின் சகோதரர் மார்க் டோபியாஸ்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தங்கள் நாட்டு கலாசாரப்படி திருமணம் செய்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also see...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.