Home /News /tamil-nadu /

கொள்ளையனை பொறிவைத்து பிடித்த மக்கள் - கண்டு கொள்ளாத போலீஸ்.. திருடனை விடிய விடிய காவல் காத்த ஊர்மக்கள்..

கொள்ளையனை பொறிவைத்து பிடித்த மக்கள் - கண்டு கொள்ளாத போலீஸ்.. திருடனை விடிய விடிய காவல் காத்த ஊர்மக்கள்..

கொள்ளையனை பொதுமக்கள் கயிற்றில் கட்டிவைத்து இரவு முழுவதும் காவல் காத்தனர்

கொள்ளையனை பொதுமக்கள் கயிற்றில் கட்டிவைத்து இரவு முழுவதும் காவல் காத்தனர்

Namakkal | நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆறு மாத காலமாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து காவல் துறையில் பல முறை பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    நாமக்கல் மாவட்டம்  ராசிபுரம் அருகே பிடிபட்ட திருடனை போலீசார் கைது செய்ய மறுத்ததால், கயிற்றில் கட்டி வைத்து பொதுமக்கள் விடிய விடிய காவல் காத்தனர்.

    ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆறு மாத காலமாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து காவல் துறையில் பல முறை பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

    எனினும் காவல்துறையினர் அலட்சியமாக இருந்ததை தொடர்ந்து தொடர் திருட்டுக்கள் நடந்த வண்ணமே இருந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள சில கடைக்காரர்கள் தங்களின் கடைகளுக்கு சிசிடிவி கேமராக்களை வைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    பிள்ளாநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே KPN நாட்டு கோழிக்கடை வைத்துள்ள பழனியப்பன் என்பவரது கடையில் பூட்டை உடைத்து மூன்று முறை சுமார் 39 கோழிகள் காணாமல் போனது. இதைத்தொடர்ந்து அவர் சிசிடிவி கேமராக்களை வைத்து கண்காணித்து வந்த நிலையில் திருடர்களின் அடையாளம் சரியாக தெரிந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் திருட்டு கும்பல் அந்தப் பகுதியில் வேவு பார்க்க வந்த போது அடையாளம் காணப்பட்டு அவர்களை அந்தப் பகுதி இளைஞர்கள் துணையுடன் கோழிக் கடை உரிமையாளர் பழனியப்பன் துரத்தியுள்ளார்.

    அங்கிருந்து தப்பித்த திருட்டு கும்பல் வையப்பமலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    முக்கிய திருடனான ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (60) என்பவனும், அவனது கூட்டாளிகள் தப்பித்த நிலையில்  தங்கராசு (50) என்பவர் வசமாக சிக்கினான். தொடர்ந்து தங்கராசை பிடித்த பொதுமக்கள் உடனடியாக புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் சென்று ஒப்படைக்க சென்றபோது உள்ளே கூட அனுமதிக்காத காவல்துறை அதிகாரிகள்  "சென்னையில் சட்டமன்றம் நடந்து வருவதால் யாரையும் பிடித்து விசாரிக்க முடியாது, எனவே இவனை நீங்களே கூட்டி சென்று பத்திரமாக வைத்து காலை அழைத்து வாருங்கள் என அலட்சியமாக பதில் சொல்லி திருப்பி அனுப்பியுள்ளனர்.

    இதனைக் கேட்ட ஊர்மக்கள் திருடனைப் பிடித்து கொடுப்பதே பெரிய விஷயம் இவர்களை விடிய விடிய பாதுகாக்க சொல்லி காவல்துறையினர் அனுப்பியது  அதிர்ச்சியையும் , எரிச்சலையும் ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.

    வேறு வழியில்லாமல் திருடனை  2 பக்கமும் கயிறு வைத்து கைகளை கட்டி அங்குள்ள கோவிலில் தூணில் கட்டி வைத்தனர்.

    திருடன் எங்கும் தப்பிச் செல்லாமல் இருக்க இரவு முழுவதும் பொதுமக்களுடன் இணைந்து, இளைஞர்களும் காவல் காத்த நிலை பார்ப்பதற்கே மிகவும் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருந்தது.

    பலமுறை புகார் கொடுத்தும் திருட்டு கும்பலை பிடிக்காத காவல்துறையினர், பொதுமக்கள் திருடனைப் பிடித்துக் கொடுத்தும், உடனடியாக கைது செய்யாமல் "இன்று போய் நாளை வா " என திருப்பி அனுப்புவது எந்த வகையில் நியாயம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    மேலும் இந்த பகுதியில் இதுவரை பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும், பல்வேறு பகுதிகளில் வழிப்பறி கொள்ளை நடந்துள்ளதாக தொடர் புகார் எழுந்துள்ளது.

    Also read... மாமூல் தர மறுத்த வளையல் கடை உரிமையாளர் மீது தாக்குதல் - அதிமுக பெண் நிர்வாகி கைது

    மக்கள் அச்சத்தில்  உரைந்துள்ள நிலையில் தற்போது சிக்கியுள்ள திருட்டு கும்பல் தான் தொடர்ந்து கைவரிசையை இந்த பகுதியில் காட்டியுள்ளது .

    இவர்களை முழு விசாரணை செய்து அப்பாவி மக்கள் இழந்த பொருட்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் அலட்சியமாக செயல்பட்ட புதுச்சத்திரம் காவல்துறை அதிகாரிகள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    -செய்தியாளர்: சுரேஷ்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime News, Rasipuram, Theft

    அடுத்த செய்தி