பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரான பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் போது அவர் முன்னே கேலி கிண்டலுடன் நடனமாடி டிக் டாக் செய்த பள்ளி மாணவர்கள் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அவலம்.
நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் செல்லப்பன். இவர் புதுச்சத்திரம் அரசு பள்ளியில் வரலாற்று ஆசிரியராக கடந்த 12 வருடங்களாக இந்தப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 30-ம் தேதி மாணவர்களுக்கு வரலாற்று பாடம் நடத்தி வந்தபோது அவரை நடுவிரலை காட்டி கொச்சைப்படுத்தும் விதமாக மாணவர்கள் டிக் டாக் செய்துள்ளனர். இதனை வகுப்பில் இருந்த சக மாணவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களை விசாரித்தபோது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே ஒழுக்க சீர்கேடு நிலவி வருகிறது. பள்ளியின் உள்ளேயும், வெளியேயும் மாணவர்கள் மாணவிகளை கிண்டல் செய்வதும் அதிக சத்தம் எழுப்பிக்கொண்டு ஓடுவதும் என ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள். இது சம்பந்தமாக பலமுறை தலைமையாசிரியர் குணசேகரனிடம் கூறியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .
பள்ளிக்குள் பள்ளி மாணவர்கள் செல்போன் அனுமதிக்கக் கூடாது என்ற நிலையில் அங்கு உள்ள ஆசிரியர்களும் மாணவர்களை சரிவர சோதிக்காமல் செல்போனுடன் உள்ளே அனுமதித்தது இந்த வக்கிர செயலுக்கு காரணம் . மேலும் கொரோனா காலத்தில் பள்ளியில் நடத்தப்படும் வகுப்புகளில் மாணவர்கள் யாரும் முக கவசம் அணிய வில்லை என்பது இந்த வீடியோவில் தெரிய வருகிறது.இது சம்பந்தமாக பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் மீது மாவட்ட கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் ஒழுங்கீனமாக நடந்துக்கொண்ட மூன்று மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கியுள்ளனர். மாணவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களிடம் டிசியை ( மாற்றுச் சான்றிதழை) தலைமை ஆசிரியர் குணசேகரன் வழங்கினார்.
செய்தியாளர்: சுரேஷ் (நாமக்கல்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.