நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுமா? மக்கள் எதிர்பார்ப்பு

மாதிரிப் படம்

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 • Share this:
  நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் 37 ஏக்கர் பரப்பளவில், ரூபாய் 338 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கி கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்தது. 2020 மார்ச் 5ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

  அதன்பின்னர் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்ற நிலையில், மருத்துவக்கல்லூரி கட்டடம், நிர்வாகக் கட்டடம், டீன் அலுவலகம், மாணவ - மாணவிகள் விடுதி, ஆசிரியர்கள் தங்கும் குடியிருப்பு என 13 மாதங்களில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதேபோன்று மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் நூலகங்களும் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

  இந்தநிலையில் வரும் செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடைபெறும் சூழலில், இந்தாண்டு நாமக்கல் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, மருத்துவ மாணவர் சேர்க்கை அங்கீகாரத்திற்காக, சென்னை மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் கடந்த 5ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் 150 மாணவ - மாணவியருக்கு இங்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. நடப்பாண்டில் எம்பிபிஎஸ் முதலாண்டு சேர்க்கைக்கு தேவையான நடவடிக்கைகளை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துறை அமைச்சர்கள் எடுத்துவருவதாக கட்டட பொறியாளர்கள் தெரிவித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா சூழலிலும் 13 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
  Published by:Karthick S
  First published: