தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 1640 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு இறுதியில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய நிலங்கள் மீட்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு நடைபெற்ற லட்சத்து எட்டு வடைமாலை அலங்கார சாத்துபடியை காண இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையிலிருந்து நாமக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தார். காலை 5 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற அவர் நரசிம்மர், ரங்கநாதர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தமிழகம் முழுவதும் 12 ஆண்டுகளை கடந்தும் குடமுழுக்கு நடைபெறாத கோயில்கள் தொடர்பாக நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். இவைத்தவிர பழமையான கோயில்களிலும் புனரமைப்பு மேற்கொள்வதற்கான பணிகள் குறித்து பார்வையிடுகிறேன். அந்த வகையில் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் ஆய்வு செய்யப்பட்டது.
இக்கோயில் வளாகத்திலேயே பணியாளர் குடியிருப்பு இருப்பதற்கு பலரும் கவலை தெரிவித்தனர். ஆஞ்சநேயர் பிரம்மச்சாரி என்பதால் அந்த குடியிருப்புகளை 500 மீட்டர் அப்பால் காலியிடத்தில் புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி வெளிமாவட்ட பக்தர்களுக்கு தங்கும் அறைகளும் கட்டிக் கொடுக்கப்படும்.
இதையும் படிங்க: 1,00,008 வடை மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சநேயர்
நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் செல்லும் மலைப்பாதையில் சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவில் தொடங்குவோம். திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில்களுக்குச் சொந்தமான பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகள் மத்திய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள நிறுவனத்தில் ஒப்படைக்கப்படும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் அறிவுறுத்தலின்படி தங்க நகைகளை உருக்கும் பணி நடைபெறும்.
மேலும் படிங்க: ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவுத் திருவிழா: 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
தமிழகம் முழுவதும் ரூ. 1640 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் நிலங்களை யாராவது ஆக்கிரமிப்பு செய்திருந்தால் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். இறை சொத்து இறை வழிக்கே என்ற அடிப்படையில் இதனை செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு, மாநில அரசு வரி செலுத்தி வருவதால், மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு தெரிவிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. 100 ஆண்டுக்கு மேலான தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் ஏஎஸ்ஐ அனுமதியுடன் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister Sekar Babu, Namakkal