முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உங்கள் தொகுதி: நாமக்கல் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

உங்கள் தொகுதி: நாமக்கல் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

உங்கள் தொகுதி: நாமக்கல் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியின் சிறப்புகள் மற்றும் அதன் அரசியல் முக்கியத்துவம் என்னென்ன?

  • Last Updated :

‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகத்தை பாடலாக முழங்கிய கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ராமலிங்கம் பிள்ளை பிறந்த நகரம் நாமக்கல்... நடுநாயகமாய் வீற்றிறருக்கும் நாமகிரி என்ற மலையால் நாமக்கல் என்ற நாமம் பெற்றது இந்த ஊர்... கொள்முதல் விலையையே நிர்ணயிக்கும் அளவுக்கு கோழிப்பண்ணை தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறது நாமக்கல் தொகுதி. சிறியதும் பெரியதுமாய் இருக்கும் 1,500க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளால் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் தோராயமாக கேரளாவுக்கு 90 லட்சமும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு 50 லட்சமும் வெளிநாடுகளுக்கு 40 லட்சம் முட்டைகளும் அனுப்பப்படுகின்றன.

நாமக்கல்லை மையமாகக் கொண்டு பல்லாயிரம் லாரிகள் இயக்கப்படுகின்றன. அதிலும் சமையல் எரிவாயு ஏற்றிச் செல்லும் 4000லாரிகள், துறைமுகத்திற்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரைலர் லாரிகள் என நாமக்கல்லே தமிழக லாரிகளுக்கு தலைநகரம்...

மருத்துவம், பொறியியல் படிக்க அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற வைக்கும் என்ற கவர்ச்சிகரமான நம்பிக்கைகளுக்கு பெயர் பெற்ற தனியார் பள்ளிகளைக் கொண்ட தொகுதி. 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை நோக்கி தமிழகம் முழுவதும் இருந்து பெற்றோர் படையெடுத்து வருவது இன்னும் குறைந்தபாடில்லை.

பொறியியல், கலை அறிவியல் என 25 தனியார் கல்லூரிகள் செயல்படுவது அந்த நம்பிக்கையின் நீட்சிதான்... நாமக்கல் மலைக்கோட்டையின் மேற்கே நரசிம்மர் ஆலயம் இருந்தாலும் புகழ்பெற்ற 18 அடி உயர ஆஞ்சநேயர் கோயில் நகரத்தின் முக்கியமான அடையாளம்.

மேலும் படிக்க... 36 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று வரும் கன்னியாகுமரி தொகுதி...(வீடியோ)

அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்று வந்த தொகுதி இது. அதிகபட்சமாக அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 4 முறையும் வாகை சூடியுள்ளன. அதிமுகவின் அருணாச்சலம் 1977 முதல் தொடர்ந்து 3 முறை வென்ற தொகுதி இது.

2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்போது எம்எல்ஏவாக இருந்த அதிமுகவின் கே.பி.பி. பாஸ்கர் மீண்டும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசின் செழியன் 13 534 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

பிரிக்க முடியாதவற்றின் பட்டியலில் நாமக்கல்லும் போக்குவரத்து நெரிசலும் எப்போதும் உண்டு. அதற்கு தீர்வு காண பேருந்து நிலைய இடமாற்றம், ரிங் ரோடு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு, அதற்காக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டாலும் திட்டங்கள் நிறைவேறவில்லை. லாரி ஸ்டாண்ட் கோரிக்கை இன்னும் கனவுதான். குளிர்சாதன வசதியுடன் கூடிய முட்டை சேமிப்புக் கிடங்கும் இதுவரை கைகூடவில்லை. ஆனாலும் தேர்தல் பற்றிய கனவுகளுடன் காத்திருக்கிறார்கள் மக்கள்.

' isDesktop="true" id="390591" youtubeid="syf5tfGCy6I" category="tamil-nadu">

அதிமுக இங்கே ஹாட்ரிக் வெற்றியைப் பெறுமா... லாரிகளின் நகரம் வேறு கட்சிகளின் கைகளுக்குச் செல்லுமா... தேர்தல் முடியும் வரை காத்திருப்போம்...

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Namakkal, TN Assembly Election 2021