காதலுக்கு எதிர்ப்பு... காதலனுடன் இணைந்து அக்காவை கொலை செய்த 17 வயது தங்கை...!

மாதிரிப்படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  நாமக்கல்லில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்காவை காதலனுடன் சேர்ந்து பிளஸ் டூ மாணவி கொலை செய்துள்ளார்.

  நாமக்கல் நகராட்சி கொசவம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி பழனிசாமி. இவருக்கு இரண்டு மகள்கள். 19 வயதான மூத்த மகள் மோனிஷா நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார்.

  இரண்டாவது மகளான 17 வயது சிறுமி அருகில் உள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தாய், தந்தை இருவரும் கூலிவேலைக்கு செல்ல, ஊரடங்கு மற்றும் விடுமுறையால் மகள்கள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.

  நண்பகலில் மோனிஷாவின் தங்கை திடீரென அலறி சத்தம்போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது, சிறுமியின் கை கிழிக்கப்பட்டு ரத்தம் சொட்டிக்கொண்டு இருந்துள்ளது. என்ன என விசாரித்தபோது, தனக்கும் தனது அக்காவிற்கும் சண்டை வந்ததாகவும், அதில் இருவரும் மாறி மாறி கையை கிழித்துக்கொண்டாதாக கூறியுள்ளார்.

  அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அக்கா மோனிஷா கை கிழிக்கப்பட்டு ரத்தம் சொட்டிய நிலையிலும், மூக்கில் ரத்தம் வடிந்த நிலையிலும் மயங்கிக் கிடந்தார். இதை அடுத்து இருவரையும் அக்கம்பக்கத்தினர் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பெற்றோருக்கு தகவல் அளித்து மருத்துவமனைக்கு வர வைத்தனர்.

  மருத்துவமனையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் மோனிஷா ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். 17 வயது சிறுமியான தங்கைக்கு மட்டும் சிகிச்சை அளித்தனர். தகவல் அறிந்து சென்ற நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அக்கா, தங்கை இடையேயான சண்டையில் 19 வயது இளம் பெண் உயிரிழந்திருக்க முடியுமா என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

  இதை அடுத்து எதற்காக சண்டை நடந்தது, மோனிஷா எப்படி உயிரிழந்தார் என சிறுமியிடம் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சிறுமியின் ஊரைச் சேர்ந்தவர் 19 வயதான ராகுல். இவர் மோனிஷா உடன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

  மோனிஷாவும் ராகுலும் ஒரே பேருந்தில் கல்லூரிக்கு செல்வார்கள். அப்போது மோனிஷாவை காதலிப்பதாகக் கூறி ராகுல் தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் ராகுலின் பழக்க வழக்கம் பிடிக்காமல் அவரை காதலிக்க மோனிஷா மறுத்துள்ளார்.

  இதனால் தனது காதலுக்கு மோனிஷாவின் தங்கையான 12வது படிக்கும் சிறுமியிடம் ராகுல் உதவி கேட்டுள்ளார். அவர் ராகுலின் காதலுக்கு அக்காவிடம் தூது சென்றுள்ளார். ஆனால் ராகுலின் பழக்கவழக்கம் சரியில்லை எனக்கூறி தங்கையை கண்டித்துள்ளார்.

  இந்நிலையில், மோனிஷா காதலிக்க மறுத்ததால், அவரின் தங்கைக்கு நூல் விட்டுள்ளார். சிறுமியை மயக்கி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் ராகுல். இந்த விவகாரம் மோனிஷாவிற்கு தெரிந்து தங்கையை கண்டித்துள்ளார். அக்காவின் கண்டிப்பு குறித்து காதலர் ராகுலிடம் சிறுமி கூறியுள்ளார்.

  காதலுக்கு இடையூறாக இருக்கும் மோனிஷாவை கொலை செய்து விடலாமா என ராகுல் விளையாட்டாக கேட்டுள்ளார். காதல் மயக்கத்தில் இருந்த சிறுமியோ சரி என கூறியுள்ளார். இதை அடுத்து சனிக்கிழமை பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு ராகுலை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் சிறுமி.

  வீட்டுக்கு வந்த ராகுலை பார்த்து, இங்கு எதற்கு வந்தாய் என கேட்டு மோனிஷா சண்டை போட்டுள்ளார். அப்போது உன்னை கொலை செய்யத்தான் ராகுல் வந்திருப்பதாக மோனிஷாவிடம் சிறுமி கூறியுள்ளார்.

  அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத மோனிஷா, ராகுலை வீட்டைவிட்டு வெளியில் அனுப்பு எனக்கூறிவிட்டு, வீட்டுக்குள் சென்று கட்டிலில் படுத்துள்ளார். அப்போது, பின்னால் சென்ற ராகுல், மோனிஷாவின் காலை பிடித்துக்கொள்ள, சிறுமி மோனிஷாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியுள்ளார்.

  இதில் மூச்சுத்திணறி மோனிஷா மயங்கியுள்ளார். மூக்கில் ரத்தம் வந்ததைப் பார்த்து பயந்துபோன ராகுல் அங்கிருந்து ஓடிவிட்டார். என்ன செய்வது என தெரியாமல் விழித்த சிறுமி, அக்காவின் கையையும், தனது கையையும் அறுத்து, சண்டையின் போது அறுத்துக்கொண்டதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

  இதை அடுத்து சிறுமியை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிய போலீசார், சிறுமியின் காதலர் ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோனிஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

  காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்காவை, காதலருடன் சேர்ந்து தங்கை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் நாமக்கல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


  இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published: