ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு...வெடிகுண்டு மிரட்டல்.. நேர்மையாக விசாரித்த நல்லம நாயுடு காலமானார்!

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு...வெடிகுண்டு மிரட்டல்.. நேர்மையாக விசாரித்த நல்லம நாயுடு காலமானார்!

நல்லம நாயுடு

நல்லம நாயுடு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் விசாரணை அதிகாரி நல்லம நாயுடு. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைக்கு சென்றதில் இவருக்கு முக்கிய தொடர்புண்டு.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி. நல்லமநாயுடு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் பெரவள்ளூரில் உள்ள தனது இல்லத்தில்  இன்று காலமானார். இவருக்கு வயது 83.

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் விசாரணை அதிகாரி நல்லம நாயுடு. திமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிதான் இந்த நல்லம்ம நாயுடு.

தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் கண்காணிப்பாளராக இருந்த நல்லம்ம நாயுடுவின் தலைமையில் 18 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுதான் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரிடம் சொத்துக்குவிப்பு தொடர்பாக விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் ஒருபகுதியாக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டுக்குள் சோதனை நடத்தி, அங்கிருந்த பொருட்களை எல்லாம் படம் பிடித்து, பதிவுசெய்தது நல்லம்ம நாயுடுவின் குழு.

வழக்கில் விசாரணை அதிகாரி என்ற முறையில் ஜெயலலிதாவிடம் கேள்விகளைக் கேட்டு, பதில்களைப் பெறுவது நல்லம்ம நாயுடுவின் முதன்மையான பணி. ஜெயலலிதாவை சிறையிலும் மருத்துவ மனையிலும் வைத்து விசாரணை செய்திருக்கிறார் நல்லம்ம நாயுடு. அப்படியான விசாரணை தருணத்தில், நல்லம்ம நாயுடுவின் தொடர்ச்சியான கேள்விகளால் சலிப்படைந்த ஜெயலலிதா, “யாரும் செய்யாததையா நான் செய்துவிட்டேன்? நான் மட்டும்தான் உலகத்தில் இல்லாததைச் செய்துவிட்டேனா? எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்னை மட்டும் ஏன் விசாரிக்கிறீர்கள்?” என்று நல்லம நாயுடுவிடம் ஆதங்கமும் ஆவேசமும் பொங்கப் பேசியிருக்கிறார் ஜெயலலிதா. அதை நல்லம்ம நாயுடு பத்திரிகைகளில் பதிவுசெய்திருக்கிறார்.

வெடிகுண்டு மிரட்டல்

ஜெயலலிதா, சசிகலாவை, சுதாகரனை சிறையிலும், இளவரசியை மன்னார்குடியிலும் வைத்து விசாரித்த நல்லம்ம நாயுடு, வழக்கு தொடர்பாக தினகரனின் சொத்துகள் குறித்து விசாரிக்க லண்டன் சென்று வந்தார். இடைப்பட்ட காலங்களில் பல நேரடியான, மறைமுகமான நெருக்கடிகளுக்கு உள்ளானார் நல்லம்ம நாயுடு. அவருடைய குடும்பத்தினரும் பல நெருக்கடிகளுக்கு உள்ளானார்கள். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.

இதையும் படிங்க: சாலையை சரிசெய்ய கர்ப்பிணி மனைவியுடன் பிச்சையெடுத்த இளைஞர்

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நல்லம்ம நாயுடு பணி ஓய்வு பெறவேண்டிய சூழல் வந்தது. அப்போது ஆட்சியிலிருந்த திமுக அரசு நல்லம்ம நாயுடுவுக்குப் பணி நீட்டிப்பு கொடுத்தது. பின்னர் மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சரானபோது தனது பதவியை ராஜினாமா செய்தார் நல்லம்ம நாயுடு. பிறகு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நல்லம்ம நாயுடு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி குன்ஹா விசாரித்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கு குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் பதிவுசெய்தார் நல்லம்ம நாயுடு. அந்த வகையில் குன்ஹா அளித்த தீர்ப்பில் நல்லம்ம நாயுடுவின் விசாரணைக்கு முக்கியப்பங்குண்டு. பிறகு நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு எதிராக வந்தபோதும், வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோதும் நீதி வெல்லும் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருந்தார் நல்லம்ம நாயுடு. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானபோது, நீதி இன்னும் செத்துப்போகவில்லை. இறுதியில்நீதி வெல்லும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் பேசினார் நல்லம்ம நாயுடு.

அதிமுக ஆட்சியில் சிறந்த அதிகாரி விருது அறிவிப்பு

இங்கே சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், 1992 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறந்த அதிகாரி விருது நல்லம்ம நாயுடுவுக்கு அறிவிக்கப்பட்டு, பதக்கம் வழங்கும் விழா வெவ்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா முதல்வரான பிறகு 2003ல் பதக்கம் வழங்கும் விழா அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: சென்னையில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு : காற்றின் திசைவேக மாறுபாடு

அப்போது சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையில் தீவிரமாக இருந்த நல்லம்ம நாயுடு, பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்று முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பதக்கம் பெறத் தயாரானார். ஆனால் உயரதிகாரிகள் தலையிட்டு, நல்லம்ம நாயுடுவை விழாவுக்கு அழைக்காமல், அவரது வீட்டுக்கே சென்று பதக்கத்தை வழங்கிவிட்டனர். ஆனால் அந்தப் பதக்கத்தைக் கடைசிவரை அவர் அணிந்துகொள்ளவே இல்லை.

சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பின்படி மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஜெயலிதாவின் அசையாச் சொத்துகளை ஏலம் விட்டு நாட்டுடைமை ஆக்கவேண்டும். அதுதான் முக்கியம். அதைச் செய்தாகவேண்டும் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருந்த நல்லம்ம நாயுடு அந்தச் சொத்துகள் நாட்டுடைமை ஆவதற்கு முன்பே மரணத்தைத் தழுவிவிட்டார்.

இதையும் படிக்க: சம்பாதிப்பது கோடி.. கொடுப்பது லட்சம்: நடிகர் சூர்யா குறித்து காயத்ரி ரகுராம் விமர்சனம்

Published by:Murugesh M
First published:

Tags: Jayalalitha, Sasikala