நக்கீரன் கோபால் விடுதலை: கைது முதல் விடுவிப்பு வரை- முழு விவரம்

நக்கீரன் கோபால் விடுதலை: கைது முதல் விடுவிப்பு வரை- முழு விவரம்
நக்கீரன் கோபால்.
  • News18
  • Last Updated: October 10, 2018, 8:15 AM IST
  • Share this:
ஆளுநரின் பணிகளை தவறாக சித்தரித்து செய்தி வெளியிட்டதாக கைதுசெய்யப்பட்ட நக்கீரன் கோபாலை, சென்னை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புனே செல்ல சென்னை விமான நிலையம் சென்ற நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபாலை, தனிப்படை போலீசார் காலையில் கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டையில் வைத்து 3 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்

கடந்த ஏப்ரல் மாதம் 20 முதல் 22ம் தேதியிட்ட, இதழில் "பூனைக்கு மணி கட்டிய நக்கீரன், பொறியில் சிக்கிய கவர்னர், சிறையில் நிர்மலாவுக்கு ஆபத்து" என்ற அட்டைப்பட வாசகத்துடன் நக்கீரன் இதழ் வெளியானது. இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி, ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவரது துணை செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரின்பேரில், ஜாம் பஜார் காவல் நிலையத்தில் நக்கீரன் கோபால் மீது, பிரிவு 124ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில், கோபால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நக்கீரன் கோபால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள், கட்டுரை மூலம் ஆளுநர் பணியில் தலையிடுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிட்டார். கட்டுரையால் ஆளுநர் எந்த நேரத்தில் பணி செய்யாமல் இருந்தார் என்பதை விளக்க வேண்டும் என்றும் ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரைக்கு, தாமதமாக கைது நடவடிக்கை எடுக்க காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கட்டுரை வெளியிட்டதற்காக பிரிவு 124-ன் கீழ் எந்த முகாந்திரமும் இல்லாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், கட்டுரையில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ மிரட்டும் தொனி இல்லாதபோது, எப்படி 124-ன் கீழ் வழக்குப் பதியலாம் என்றும் நக்கீரன் கோபால் தரப்பில் வாதிடப்பட்டது.இதையடுத்து, ஏப்ரல் மாதம் முதலே நக்கீரன் இதழில் வெளியான கட்டுரைகளை தொடர்ந்து கண்காணித்து வந்ததாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுக்கும் உள்நோக்கத்துடன் கட்டுரை வெளியிட்டு வந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.பத்திரிகையாளர் தரப்பில் ஆஜரான இந்து என்.ராம், ஒரு செய்தி வெளியிட்டதற்காக பிரிவு 124-யை பயன்படுத்த முடியாது என தெரிவித்தார். ஒரு செய்திக்காக பிரிவு 124யை பயன்படுத்தி கைது செய்திருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை என்றும் இந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்தால் நாடு முழுவதுமே ஒரு தவறான முன் உதாரணமாக இருக்கும் என்றும் இந்து என்.ராம் கோரிக்கை வைத்தார்.

ஒன்றரை மணி நேர வாதங்களுக்கு பிறகு உத்தரவுக்காக, சிறிது நேரம் ஒத்திவைத்தார் நீதிபதி கோபிநாத். பின்னர் மீண்டும் விசாரணை தொடங்கியதும், இந்த புகார் அளிக்கப்பட்டது ஆளுநருக்கு தெரியுமா என்றும் ஆளுநர் ஒப்புதலின்பேரிலேயே இந்த புகார் அளிக்கப்பட்டதா எனவும் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞரிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து அடிப்படை ஆதாரமற்ற வகையில் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறிய நீதிபதி, அவரை சிறைக்கு அனுப்ப மறுத்து விடுதலை செய்தார்.

பத்திரிகையாளர் தரப்பில் வாதிட சிறப்பு அனுமதி அளித்த நீதிபதிக்கு மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் நன்றி தெரிவித்து கொண்டார்.

 
First published: October 10, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading