Nakkalites | மிரட்டி முடக்க நினைக்காதீர்கள்.. எங்கள் கையில் கலை இருக்கிறது - மக்கள் நீதி மய்யத்தினர் எதிர்ப்புக்கு நக்கலைட்ஸ் பதில்

நக்கலைட்ஸ்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை விமர்சித்து போடப்பட்ட வீடியோ வந்த எதிர்ப்புக்கு நக்கலைட்ஸ் குழுவினர் பதிலளித்துள்ளனர்.

  • Share this:
கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் "நக்கலைட்ஸ்" என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்தி வருகின்றனர். அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளை மையப்படுத்தியும், பொழுது போக்காவும் நையாண்டி வீடியோகளை யூ டியூப் சேனலில் வெளியிட்டு வருகின்றனர். அவர்களுடைய வீடியோக்களுக்கு மாநிலம் தழுவிய அளவில் நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. அவர்களுடைய வீடியோக்கள் ஒவ்வொன்று பத்து லட்சத்துக்கும் கூடுதலான பார்வையாளர்களைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனின் அரசியலை மய்யப்படுத்தி "நக்கலைட்ஸ் " யூடியூப் சேனல் குழுவினர் "உன்னால் முடியாது தம்பி" என்ற வீடியோவை இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டனர். இந்த வீடியோவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. "நக்கலைட்ஸ் " யூ டியூப் சேனல் குழுவினரை மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து பின்னூட்டமிட்டனர்.

இந்நிலையில் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவாளர்களுக்கு "நக்கலைட்ஸ்" யூடியூப் சேனல் குழுவினர் பதில் தெரிவித்து தங்கள் முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் அன்பு மக்கள் நீதி மய்ய ஆதரவாளர்களுக்கு வணக்கம்,
'உன்னால் முடியாது தம்பி' வீடியோ ஏற்படுத்தி உள்ள விவாதங்களுக்கு பதில் அளிக்கவே இந்த பதிவு. பெரும்பாலான தமிழ் மக்களைப் போலவே நாங்களும் கமல்ஹாசன் என்கிற மிகச்சிறந்த நடிகரின் ரசிகர்கள்தான். இந்தியாவின் ஆகச்சிறந்த திரைக்கலைஞர்களில் அவரும் ஒருவர். மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் சகலகலா வல்லவன் படத்தின் TOXIC MASCULINITY தொடங்கி பாபநாசம் படம் உருகி உருகி காப்பாற்றும் CHASTITY, பெண்ணுடல் மீது கட்டப்படும் புனித பிம்பம்  வரை அவருடைய பெரும்பாலான படங்களின் உள்ளடக்கமான கருத்துகளோடும்  அரசியலோடும் பெரும் முரண்பாடு உடையவர்கள். அதன் தொடர்ச்சியாகவே அவருடைய அரசியலோடும் அந்த அரசியல் முன்வைக்கப்படும் முறையோடும் கடுமையாக முரண்படுகிறோம்.
கமல்ஹாசனின் ரசிகர்களாக இருந்து இன்று அவருடைய கட்சியின் தொண்டர்களாக மாறிவிட்டவர்களுக்கு, அவர் அனைத்துத் தீமைகளிலிருந்தும் தங்களை மீட்க வந்த அரசியல் மேதையாகவும், தியாகியாகவும் தலைவராகவும் தெரியலாம். தவறில்லை.
ஆனால் எங்களுடைய அரசியல் சமூகப் புரிதலுக்கு வள்ளுவன் , அவ்வை, வள்ளலார், அயோத்திதாசர், பெரியார், சிங்காரவேலர் என்று ஈராயிரமாண்டு மரபுத் தொடர்ச்சி உண்டு. இந்த சிந்தனைத் தொடர்ச்சியின் வழியாகவே எங்கள் சமூக அரசியல் நிலைப்பாடும் அமைகிறது.

எங்கள் சமூக அரசியல் நிலைப்பாட்டின் வழி இந்தத் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் கேடு தரக் கூடிய எந்த அரசியல் இயக்கமோ, கட்சியோ அதை நாங்கள் விமர்சிக்கவும் எதிர்க்கவும் செய்வோம். நக்கலைட்ஸ் என்ற இந்த ஊடகம் தொடங்கிய நாளிலிருந்து அதைத்தான் செய்து வருகிறோம். இனியும் செய்வோம். எல்லா கட்சிகளையும் விமர்சிக்க உனக்கு தில் இருக்கா என்று கேட்பவர்களுக்கு, விமர்சித்திருக்கிறோம், வழக்கு, விசாரணை, மிரட்டல்கள் எல்லாவற்றையும் சந்தித்திருக்கிறோம் என்பதுதான் எங்கள் பதில்.

நக்கலைட்ஸ் YOUTUBE சேனலில் உள்ள PLAY LIST-ல் POLITICAL SATIRE, SOCIAL SATIRE பட்டியலில் உள்ள வீடியோக்களை, சவால் விடும் மய்யத்தார்கள் பார்த்துவிட்டு வரவேண்டும். BONUS ஆக URBAN NAKKALITES இல் உள்ள GST வீடியோக்களையும் ஒருமுறை பார்க்க வேண்டும். அறுபத்து ஐந்து வயது வரை சாவகாசமாக இருந்துவிட்டு திடீர் ஞானம் வந்து பொங்கிக்கொண்டு அரசியல் களத்திற்கு வந்தவர்கள் நாங்கள் அல்ல. பதின் பருவக் காலம் தொட்டு அரசியல் களத்தில் நிற்பவர்கள். உங்கள் ஆண்டவருக்கும் மூத்தவர்கள். ஆகவே இளையவர்களே சற்று இளைப்பாறுங்கள்.
தி.மு.க  விட்ட எலும்புத்துண்டுக்கு விலைபோய் விட்டீர்கள். அ.தி.மு.கவின் ரகசிய ஏஜென்ட்டுகள் என்று சாட்டையடி பதிவு போட்டுவிட்ட மய்யத்தார்களே.

உங்களை விமர்சிப்பவர்களெல்லாம் தி.மு.க வுக்கும் அ.தி.மு.கவுக்கும் விலை போனவர்களாகத்தான் இருக்க வேண்டுமென்றால், உங்களுடைய LOGIC படியே திராவிட கட்சிகளை விமர்சிக்கும் நீங்கள் ஏன் பா.ஜ.க வுக்கு விலை போனவர்களாக இருக்கக் கூடாது? பாபர் மசூதி இடித்ததை கமல் கண்டித்தார். மெழுகுவர்த்தி ஏந்திப் போராடினார். உனக்கு அதெல்லாம் தெரியுமா? விடலைகளான நாங்கள் ஆண்டவருடைய அருமை பெருமையெல்லாம் அறிந்திருக்கவில்லைதான். வருந்துகிறோம் . தவறைத் திருத்திக்கொள்கிறோம். ஆனால் விஸ்வரூபத்திலும் , தசாவதாரத்திலும் அள்ளித் தெளிக்கப்பட்ட ISLAMOPHOBIA எந்த வகையிலான நிலைப்பாட்டில் சேர்த்தி என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும்.

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அப்படி வரும் இளைஞர்கள் உங்களை விமர்சித்துவிட்டால் 'சின்னப் பசங்க ' உங்களுக்கு வயசும் பத்தாது அனுபவமும் பத்தாது என்பது...
இந்த எகத்தாளமெல்லாம் எந்த மேட்டிமைத் தனத்திலிருந்து ஊற்றெடுக்கிறது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். தாரை தப்பட்டை அதிர அதிர எதிர் எகத்தாள வீடியோக்கள் வெளிவரும் என்பதை பதிலாகக் கூறிக்கொள்கிறோம்.

SATIRE என்கிற கலை வடிவின் வழியாக எங்கள் அரசியல் விமர்சனகளைப் பதிவு செய்கிறோம். மாற்றுக் கருத்து இருந்தால், விவாதிக்க வாருங்கள். நாங்கள் ஒருநாளும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் இருந்ததில்லை. கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி எங்களை இழிவுபடுத்திவிடலாம் என்று நினைத்தால், மிரட்டியோ , புகார் செய்தோ எங்களை முடக்க நினைத்தால், எங்கள் கையில் 'கலை' இருக்கிறது. அது என்ன செய்யும் என்பதை எல்லோரை விடவும் நம் ஆண்டவரே நன்கு அறிவார். அவரிடமே கேட்டு அறிந்து கொள்ளுங்கள். நாங்க என்ன இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களா ? நீ வெளக்கு புடிச்சு பாத்தியா ? இப்படி ஒரு மய்யத்தார்.

விளக்குப் பிடிப்பது எங்கள் வேலை இல்லை. மய்யத்தார் கையில் தான் TORCH இருப்பதாகக் கேள்விப்பட்டோம். எந்த விமர்சனத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி தரங்கெட்டுப் பேசும் நீங்கள்தான், தமிழக மக்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறீர்கள் என்று நாங்கள் நம்ப வேண்டும். அப்படித்தானே ? நீங்கள் கொண்டுவரும் மாற்றம் உங்கள் வார்த்தைகளைப் போலவே கேவலமாக இருந்துவிட்டால் ?
கட்சி அறிக்கைகளை வைத்தே எல்லா முடிவுகளுக்கும் வந்துவிடலாமென்றால், நேற்று கட்சி தொடங்கிய அண்ணன் மன்சூர் அலி கானுக்குக் கூட முச்சந்தியில் சிலை வைக்கலாம். பள்ளி விண்ணப்பத்தில் சாதிப் பெயர் குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டால் சாதி உணர்வு இல்லாமல் போய்விடும் என்கிற சமூக அறிவியல் தத்துவத்தை உதிர்த்தவர் யார்? 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குப் போட்ட வக்கீல் விஜயனை மய்யத்தில் உட்காரவைத்துக்கொண்டு நீங்கள் பேசும் சமூகநீதி எந்தத் தரத்தில் இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா? சக்கரை என்று காகிதத்தில் எழுதி நக்கிவிட்டால் இனிக்குமா ? களத்தில் மக்கள் நீதி மய்யம் நடத்திய போராட்டங்கள் எத்தனை? சிறை சென்ற தியாகிகள் எத்தனை பேர்? ஆனால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக முப்பதாண்டுகளுக்கும் மேலாக பல போராட்டங்களும், சிறையும் கண்டு  அரசியல் கட்சி நடத்தி வரும் திருமாவளவன் உங்களிடம் கூட்டணிக்கு வந்து நிற்க வேண்டுமா?  எங்கிருந்து வந்தது இந்த ஆணவம்?

ஆணவமும் ஆதிக்கமும் எந்தத் தோரணையில் வந்தாலும் அதற்கு எதிரான கலை வெளிப்பாடும் சமூகத்தில் இருந்தே தீரும். இந்த இயங்கியல் கூடப் புரியாத அரசியல் அம்மாஞ்சிகளாக மய்யத்தார் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இல்லாவிட்டால், அரசியலையும் சமூக சேவையையும் போட்டுக் குழப்பிக் கொள்வீர்களா?  ரத்ததானம் செய்வதும், புயல் பாதித்த பகுதி மக்களுக்கு பாய் , பெட்ஷீட் கொடுப்பதெல்லாம் அரசியல் பணி என்று ஆகிவிட்டால், ஆட்சி அதிகாரத்தை லயன்ஸ், ரோட்டரி கிளப்புகளிடமே ஒப்படைத்துவிடலாம்.  அதற்கு மக்கள் நீதி மய்யம் தேவை இல்லை.
இறுதியாக, நாம் இந்த சமூகத்தில் தான் இயங்கப்போகிறோம் . விமர்சனங்களோடும் விவாதங்களோடும் இயங்குவோம். சிங்காரவேலன் திரைப்படத்தை விடவும் தரம் தாழ்ந்த விமர்சனத்தை நாங்கள் வைத்துவிடவில்லை. அவருடைய தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடவில்லை. எங்கள் எல்லை என்ன என்று எங்களுக்குத் தெரியும். எங்கள் ஆசான்கள் எங்களுக்கு அநாகரிகத்தைக் கற்றுக்கொடுக்கவில்லை. உங்களுக்குப் புரியும் என்ற நம்பிக்கையோடு புதிய வீடியோவோடு மீண்டும் வருவோம் .  காத்திருங்கள். புரட்சி என்பது மாலை நேரத் தேநீர் விருந்து அல்ல நண்பர்களே.. நன்றி... இப்படிக்கு நக்கலைட்ஸ் கமல் ரசிகர்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கமல் ஹாசனின் அரசியலை விமர்சித்து வெளியிடப்பட்ட வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: