HOME»NEWS»TAMIL-NADU»nainar nagendran tries to contest tirunelveli constituency skd

நான்குமுறை அ.தி.மு.க சார்பில் போட்டி: 5-வது முறையாக பா.ஜ.க போட்டியிட திருநெல்வேலி தொகுதியை குறிவைக்கும் நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் 4 முறை போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் இந்தமுறை பா.ஜ.க சார்பில் வேட்பாளராக களமிறங்குவதற்கான முயற்சிகளைச் செய்துவருகிறார்.

நான்குமுறை அ.தி.மு.க சார்பில் போட்டி: 5-வது முறையாக பா.ஜ.க போட்டியிட திருநெல்வேலி தொகுதியை குறிவைக்கும் நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
  • Share this:

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கபடாவிட்டாலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்மரம் காட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க மாநில தலைவர் முருகன் உள்ளிட்டவர்கள் மாவட்டந்தோறும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு நெல்லைக்கு வருகை தந்த பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி மற்றும் மாநில தலைவர் முருகன் ஆகியோர் வண்ணாரப்பேட்டையில் நெல்லை சட்டமன்றத் தொகுதி சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்தை நடத்தி விட்டு சென்றுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகள் இருக்க நெல்லை தொகுதிக்கு மட்டும் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன கேள்வி எழும் நிலையில் அதற்கான விடை நயினார் நாகேந்திரன். நெல்லை மண்ணின் மைந்தரான இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவிலிருந்து பாஜகவிறகு சென்றார்.

சசிகலாவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட இவர் அவர் சிறை சென்ற நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியில் பாஜக பக்கம் வந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அக்கட்சியின் மாநில தலைவர் பதவி தனக்கு கிடைக்கும் என காத்திருந்தார். ஆனால் முருகன் தலைவராக நியமிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த அவர் விரைவில் கட்சியை விட்டு வெளியேறி திமுக அல்லது அதிமுக வில் இணைந்து விடுவார் என பரபரப்பாக பேசப்பட்டது.



தற்போது தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து போட்டியிட விரும்பி தலைமையிடம் காய் நகர்த்தி வருகிறார். தலைமை அவருக்காக தொகுதியை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவே தெரிகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளில் பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தாமல் வெற்றி வாய்ப்புள்ளதாக கருதப்படும் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் மட்டும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நெல்லை தொகுதிக்கான கூட்டமும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. நயினார் நாகேந்திரன் கடந்த 2001ம் ஆண்டு முதன்முறையாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு 722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து துறை, தொழில்துறை, மின்துறை அமைச்சர் என பதவிகளை வகித்தார். ஆனால் 2006 ம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெறும் 606 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2011ம் ஆண்டு மீண்டும் இவருக்கு போட்டியிட ஜெயலலிதா சீட் வழங்கினார். அப்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 38 ஆயிரத்து 491 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து 4 ம் முறையாக 2016ல் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு அதே திமுக வேட்பாளரிடம் 601 வாக்குகளில் வெற்றியை பறிகொடுத்தார். அந்த தேர்தலில் தேமுதிக 8,640 வாக்குகளையும், பாஜக 6,017 வாக்குகளையும் பெற்றிருந்தனர்

அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு அதிகம் உள்ளதால் இந்த முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் காய் நகர்த்தி வருகிறார். ஆனால் தொகுதி அதிமுக பிரமுகர்கள் அக்கட்சி வேட்பாளரே போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அதிமுக தலைமை தொகுதியை பாஜக விற்கு கொடுக்க சம்மதிக்குமா என்ற கேள்வி எழுகிறது. அதோடு அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு பெற்றவாக்குகளை பாஜக வேட்பாளராக போட்டியிடும் போது பெற முடியுமா என்ற கேள்விகள் எழுகிறது. எது எப்படியோ திருநெல்வேலி தொகுதி பாஜக விற்கு ஒதுக்கப்பட்டால் நிச்சயமாக நயினார் நாகேந்திரன் தான் வேட்பாளர் என்பது நிதர்சனமான உண்மை.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: