Home /News /tamil-nadu /

இட்லி ரூ.2, தோசை ரூ.5 - 30 ஆண்டுகளாக மலிவு விலையில் உணவு வழங்கும் மல்லிகா அம்மா

இட்லி ரூ.2, தோசை ரூ.5 - 30 ஆண்டுகளாக மலிவு விலையில் உணவு வழங்கும் மல்லிகா அம்மா

30 ஆண்டுகளாக இட்லி கடை வைத்திருக்கும் மல்லிகா அம்மா.

30 ஆண்டுகளாக இட்லி கடை வைத்திருக்கும் மல்லிகா அம்மா.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 50 பைசாவிற்கு இட்லி விற்க தொடங்கி, தற்போது 2 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார் 60 வயதான மல்லிகா அம்மா.

உணவுப் பிரியர்களுக்காக பல்வேறு உணவகங்கள் புதிது புதிதாக, நாளுக்கு நாள் உதயமானாலும் உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்த பாடில்லை. இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக 50 பைசாவிற்கு இட்லி விற்கத் தொடங்கி, தற்போது 2 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார் 60 வயதான மல்லிகா அம்மா.

நாகை மாவட்டம் நாகூர் பங்களா தோட்டம் பகுதியையொட்டிய புளிய மரத்தடி பெயரைச் சொன்னால் பலருக்கும் மல்லிகா அம்மா இட்லி கடைதான் நினைவுக்கு வரும். 30 ஆண்டுகளாக இரண்டு ரூபாய் இட்லி விற்பனை செய்துவரும் இவருக்கு 2 மகள்கள், 1 மகன் இருந்துவந்த நிலையில், ஒரு மகன் உயிரிழந்தைத் தொடர்ந்து இரண்டு மகள்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டு, தற்போது தனது கணவர் ராஜேந்திரனுடன் வசித்து வருகிறார் மல்லிகா. இரண்டு ரூபாய்க்கு அவர் விற்கும் இட்லிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

மல்லிகா அம்மா இட்லி கடை செய்திகள் வெளிவரத் தொடங்கிய நாளிலிருந்து, புளிய மரத்தடி பகுதியைச் சுற்றி வலம் வருகிறார்கள் உணவுப் பிரியர்கள். அத்தனை அலாதியான ருசியை, பாக்கெட்டை பதம் பார்க்காத விலையில் இத்தனை வருடங்களாக இவரால் எப்படிக் கொடுக்க முடிகிறது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு சட்னி, சாம்பார், காரச் சட்னி உள்ளிட்ட வகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், கொத்தனார், சிறு குறு வியாபாரிகள் என அனைவருக்கும் குறைந்த விலையில் கை கொடுப்பதும் இவரது இட்லிதான்.

30 ஆண்டுகளுக்கு முன்பு 50 பைசாவிற்கு இட்லி விற்கத் தொடங்கி தற்போது 2 ரூபாய்க்கு மட்டுமே இட்லி விற்பனை செய்து வருவதாகப் பெருமிதம் தெரிவிக்கும் மல்லிகா, வயதான கணவரை வைத்துகொண்டு வேறு வழி இல்லாமல் 100 ரூபாய் லாபத்திற்கு இட்லி கடை நடத்துவதாகக் கூறுகிறார். மேலும், கணவருக்கு முதியோர் உதவித் தொகை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, தன்னை ஏமாற்றி 2,000 பணம் கையூட்டு பெற்றுகொண்டும், இதுவரை பலன் கிடைக்கவில்லை என்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மல்லிகா வேதனையுடன் கூறுகிறார்.

Also read: குப்பைத் தொட்டியில் மீட்கப்பட்ட குறைமாத குழந்தை - பெரும்பயனாக இருந்த அரசின் தாய்ப்பால் வங்கி

இட்லி மட்டுமின்றி 5 ரூபாய்க்கு தோசையும், 7 ரூபாய்க்கு முட்டை தோசையும் என்ற ரீதியில் தற்போது குறைந்த விலைக்கு விற்பனையைச் செய்து வருவதாகக் கூறும் அவர், கொரோனோ காலத்தில் தற்போது வியாபாரமும் குறைவாக நடைபெறுவதாக வேதனை தெரிவிக்கின்றார். இருந்தபோதிலும், நாளுக்கு நாள் மல்லிகா இட்லி கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதுடன், அவர் குறைந்த விலையில் இட்லி விற்பனைச் செய்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Published by:Rizwan
First published:

Tags: Food, Nagappattinam

அடுத்த செய்தி