பட்டாக் கத்தி, சொந்த வீடு, வட்டித் தொழில் - நாகர்கோவிலில் பிச்சை எடுப்பவர்களின் அதிர்ச்சி அளிக்கும் வாழ்க்கை

Youtube Video

கொரோனா ஊரடங்கு காரணமாக நாகர்கோவிலில் ஆதரவற்று யாசகம் செய்பவர்களை மாநகராட்சி மீட்டபோது அவர்களில் பலரின் பின்னணி சற்றும் எதிர்பாராததாக இருந்திருக்கிறது.

 • Share this:
  கொரோனா ஊரடங்கால் சாலையோர வியாபாரிகள், உணவகம் நடத்துபவர்கள், கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் பலரும் கவனிக்க மறந்தவர்கள் பிச்சைக்காரர்கள். யாசகம் செய்வதே தொழிலாய் வாழ்பவர்களின் நிலையைக் கண்டு இரங்கிய நாகர்கோயில் மாநகராட்சி நிர்வாகம், தன்னார்வலர்களின் உதவியுடன் அவர்களுக்கு உணவும், தங்குமிடமும் அளிக்க முன்வந்தது. தங்குவதற்கு ஆயுர்வேதா கல்லூரி தயார் செய்யப்பட, உணவுக்கு அபய கேந்திரா அமைப்பு கை கொடுத்தது.

  அதனால் தன்னார்வலர்கள் வீதி, வீதியாக பிச்சைக்காரர்களை அழைத்தபோது அவர்களில் பலரின் பின்னணி வியப்பில் ஆழ்த்தியது. சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிச்சையெடுத்து கையில் 2,500 ரூபாய் வைத்திருந்தார். கூடவே ஒரு பட்டாக்கத்தி. அதிர்ந்து போன தன்னார்வலர்கள் கத்தி ஏன் என விசாரிக்க இரவில் யாரேனும் பிச்சை எடுத்த பணத்தை திருட வந்தால் மிரட்டத்தான் என அவர் வெகுளித்தனமாக கூற தன்னார்வலர்களுக்கு என்ன சொல்வது என்றெ தெரியவில்லை.

  இன்னொருவரை முகாமிற்கு அழைத்தபோது வர மறுத்த அவர் தனக்கு சொந்தமாக வீடு இருக்கிறது என கூறி அதிர வைத்தார். வீடு எங்கே என்றால் அது கருங்கல் என்ற இடத்தில் உள்ளதாக கூறினார். அதற்கும் அவர் பிச்சையெடுக்கும் நாகர்கோயிலுக்கும் 25 கிலோ மீட்டர் தூரம். அங்கிருந்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பிச்சையெடுக்க ஆட்டோவுக்கு 500 ரூபாய் கொடுத்து நாகர்கோயில் வருவேன் என அவர் கூலாக கூற தன்னார்வலர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டனர். மீட்கப்பட்ட பல பிச்சைக்கார்களுக்கு சொந்தமாக குடும்பம், குழந்தைகள் உள்ளதாக தெரியவந்திருக்கிறது. அவர்கள் கைவிட்டதால் வேறு வழியின்றி யாசிப்பதை தொழிலாக்கிக் கொண்டதாக கூறியிருக்கிறார்கள்.

  இன்னும் சிலர், பிச்சை எடுத்த பணத்தை வட்டிக்கு விடுவதாக கூறியும் அதிர வைத்திருக்கிறார்கள். இப்படி பல அதிரடி பின்னணியுடன் மீட்கப்பட்ட 49 பிச்சைக்காரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் இருவருக்கு மட்டும் தொற்று உறுதியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை கவனிப்பு மையத்திலேயே தங்கியிருக்குமாறும், அவர்களுக்கு உணவு தருவோம் என்றும் மாநகராட்சி கூறியபோதும் பலரும் தாங்கள் வீட்டிற்கே செல்வதாக கூறி நழுவிவிட்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடைசியில் இப்போது 4 பேர் மட்டுமே மாநகராட்சியின் முகாமில் இருக்கிறார்கள். ஆட்டோ பிடித்து வந்து பிச்சை எடுப்பது, வட்டிக்கு விடுவது என நாகர்கோயில் பிச்சைக்காரர்களின் சொகுசு வாழ்க்கையைக் கண்டு மிரண்டுபோன தன்னார்வலர்கள் இன்னும் அதில் இருந்து மீண்டபாடில்லை.
  Published by:Karthick S
  First published: